பாரிசில் இருந்து 6,500 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஹரியானாவின் சின்னஞ்சிறு கிராமமான BALALI களையிழந்து கிடக்கிறது. 100 கிராம் கூடுதல் எடையால் ஒலிம்பிக் இறுதிப்போட்டியில் பங்கேற்க முடியாமல் தகுதிநீக்கம் செய்யப்பட்ட வினேஷ் இங்குதான் பிறந்து வளர்ந்தார்.
இந்த கிராமம், மல்யுத்த வீராங்கனைகளால் புகழ் பெற்றது. எண்ணற்ற சர்வதேச பதக்க மங்கைகள் இங்கிருந்து உருவாகியிருக்கிறார்கள். சுமார் 500 வீடுகள் உள்ள இந்த கிராமத்தில் பெரும்பான்மையானவர்கள் ஜாட் சமூகத்தினர். இந்த கிராமத்தில் யாரிடம் பேசினாலும் வினேஷ் தங்கம் பெற முடியாமல் போனதை நினைத்துத்தான் வருந்துகிறார்கள்.
இக்கிராம மக்கள் “வினேஷ், தனது கூடுதல் எடையைக் குறைக்க போராடிக் கொண்டிருக்கிறார் என்பதை அறிந்த உடன் அவரது தாய் மயக்கமடைந்து விழுந்துவிட்டார். வினேஷ் இங்குள்ள மல்யுத்த வீராங்கனைகளுக்கெல்லாம் முன்னுதாரணமாக இருப்பவர்” என்று கூறுகின்றனர்.
மேலும், “மல்யுத்தத்தில் இருந்து அவர் ஓய்வு பெற்றால் அது இளம் வீரர், வீராங்கனைகள் மத்தியில் இன்னும் தாக்கத்தை ஏற்படுத்தும். வினேஷ் இறுதிப்போட்டிக்கு முன்னேறும் வரை எந்த பிரச்னையும் இல்லாதபோது, இறுதியில் அப்படி தகுதி நீக்கம் செய்யப்பட்டது ஏன்? இதில் சதி இருக்கிறது” என்கின்றனர்.
வினேஷ் குழந்தையாக இருந்தபோதே அவரது தந்தை கொல்லப்பட்டதால், வினேஷையும் அவரது சகோதரியையும் எடுத்து வளர்த்தவர், அவர்களின் பெரியப்பா மகாவீர் போகத்தான். இவர், “வினேஷ் நாடு திரும்பியதும் எப்படியாவது அவரது மனதை மாற்றி மீண்டும் மல்யுத்த களத்திற்கு வரவைப்பேன்” எனக் கூறுகிறார்.
பெரும் வரவேற்பை பெற்ற டங்கல் திரைப்படத்தில் இந்த பெரியப்பா மகாவீர் கதாபாத்திரத்தில்தான் அமீர்கான் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மகாவீர், தனது மகள்கள், கீதா, பபிதா, சங்கீதாவுடன், வினேஷ் போகட்டையும், அவரது சகோதரி பிரியங்காவையும் வளர்த்தார். அனைவரையும் மல்யுத்த வீராங்கனைகளாக்கியுள்ளார். இவர்களில் வினேஷ் போகட், சீற்றம் கொண்ட புலியைப்போல இருப்பவர் என்று கூறும் கிராம மக்கள், வினேஷிற்கு தங்கம் கிடைக்காமல் போனதால் உணவின்றி, உறக்கமின்றி வாடுவதாக கூறுகிறார்கள். TEEJ திருவிழாவும் கொண்டாடப்போவதில்லை என்கிறார்கள். தங்கம் வெல்லாவிட்டாலும், இந்தியர் அனைவரின் இதயங்களை வென்றுள்ள வினேஷ் போகட் பயிற்சி செய்யும் மல்யுத்த பயிற்சிக்களம், அவருக்காக காத்திருக்கிறது.