2024 பாரிஸ் ஒலிம்பிக் தொடரானது ஜுலை 25ம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. பதக்க வேட்டையை தொடங்கியிருக்கும் உலகநாடுகளுக்கு இடையே, 117 பேர் கொண்ட குழுவுடன் பயணித்துள்ள இந்தியா, துப்பாக்கி சுடுதலில் முதல் பதக்கத்தை வென்று தன் கணக்கை துவங்கியுள்ளது. துப்பாக்கி சுடுதலில் ஏர் பிஸ்டல் பிரிவில் வெண்கல பதக்கம் வென்ற மனு பாக்கர், இந்தப் பிரிவில் பதக்கம் வெல்லும் முதல் பெண் இந்திய வீராங்கனை என்ற சாதனையையும் படைத்திருக்ககிறார்.
ஒரு பதக்கத்துடன் தொடர்ந்து இந்திய அணி தங்களுடைய பதக்க கணக்கை உயர்த்தும் வகையில் போராடி வருகிறது. அந்தவகையில் இன்றைய நாள் முடிவில் அடுத்த பதக்கத்திற்கான தேடலில் முன்னேற்றம் கண்ட இந்திய வீரர்கள் குறித்து தெரிந்து கொள்ளலாம்..
2வது பதக்கத்தை தேடும் மனு பாக்கர்:
பாரிஸ் ஒலிம்பிக் தொடர் துப்பாக்கி சுடுதல் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் ஒற்றையர் பிரிவில் பதக்கம் வென்ற மனு பாக்கர், 10 மீட்டர் ஏர் பிஸ்டல் கலப்பு இரட்டையர் பிரிவில் தன் இணையுடன் முன்னேற்றம் கண்டுள்ளார். அந்த வகையில், மனு பாக்கர்-அர்ஜுன் சரப்ஜோட் இணை வெண்கல பதக்கத்திற்கான சுற்றுக்கு முன்னேறி அசத்தியுள்ளது.
காலிறுதிக்கு முன்னேறிய பேட்மிண்டன் இணை:
2024 பாரிஸ் ஒலிம்பிக் தொடரில் பேட்மிண்டன் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சாத்விக்-சிராக் இணை முதல்முறையாக காலிறுதிக்கு முன்னேறி வரலாறு படைத்துள்ளனர்.
இன்று இந்திய இணைக்கு எதிராக விளையாட வேண்டிய ஜெர்மனி வீரர்கள் காயம் காரணமாக விலகியில் நிலையில், பிரான்ஸ் நாட்டின் Corvee/Labar's இணை இந்தோனேசியா நாட்டின் Rian/Fajar இணைக்கு எதிராக தோல்வி அடைந்தனர். இதன் மூலம் இந்தியாவின் SATWIK RANKIREDDY / CHIRAG SHETTY இணை காலிறுதிக்கு முன்னேறியுள்ளது, ஒலிம்பிக்ஸ் வரலாற்றில் இந்தியா பேட்மிண்டன் இரட்டையர் பிரிவில் காலிறுதிக்கு முன்னேறியுள்ளது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவை காப்பாற்றிய ஹாக்கி கேப்டன்:
ஹாக்கியில் அர்ஜென்டினா-இந்தியா இடையே நடைபெற்ற போட்டி 1-1 என்ற கோல் கணக்கில் சமணில் முடிந்தது. கடந்த போட்டியில் இறுதி நிமிடத்தில் கோல் அடித்து இந்தியாவிற்கு வெற்றியை தேடித்தந்த இந்திய அணியின் கேப்டன் ஹர்மன்பிரீத் சிங், இந்த போட்டியிலும் இறுதி நிமிடங்களில் கோல் அடித்து இந்தியா போட்டியை டிரா செய்ய முக்கிய பங்காற்றினார்.
நூலிழையில் பறிபோன பதக்கம்:
10 மீட்டர் AIR RIFFLE பிரிவில் நூலிழையில் பதக்க வாய்ப்பை இழந்தார் அர்ஜுன் பபுட்டா. அவர் 208.4 புள்ளிகளுடன் 4வது இடத்தை பிடித்தார்.
தோல்வி:
* மகளிருக்கான இரட்டையர் பேட்மிண்டன் போட்டியில் இந்திய வீராங்கனைகள் தனிஷா மற்றும் அஸ்வினி பொண்ணப்பா இணை, ஜப்பான் நாட்டின் NAMI,CHIHARU இணையிடம் 21-11, 21-12 என்ற நேர் செட் கணக்கில் தோல்வி அடைந்து தொடரை விட்டு வெளியேறினார்.