செய்தியாளர் - சந்தானகுமார்
ஒலிம்பிக்ஸ் போட்டியில் இறுதிவரை போராடி பதக்கம் வெல்லும் வாய்ப்பை இழந்த இந்திய வீரர், வீராங்கனைகள் யார் யார் என்பதை காணலாம் தொகுப்பில்.
மாபெரும் விளையாட்டு திருவிழாவான ஒலிம்பிக்ஸ் போட்டியில் பங்கேற்கும் ஒவ்வொரு வீரர், வீராங்கனைகளுக்கும் பதக்கம் வெல்ல வேண்டும் என்பதே குறிக்கோளாக இருக்கும். ஒலிம்பிக்ஸ் போட்டிகளில் தோல்வியால் ஏற்படும் வேதனையைவிட மிகப்பெரிய வலியை தருவது, நூலிழையில் பதக்கத்தை வெல்லும் வாய்ப்பை இழப்பதுதான்.
அப்படிப்பட்ட நிலையை ஒலிம்பிக்ஸ் வரலாற்றில் 17 இந்தியர்கள் சந்தித்துள்ளனர். ஒலிம்பிக்ஸ் தொடரின் போது மல்யுத்தம் பிரிவில் இந்திய வீரர் ரந்திர் ஷிண்டே 4ஆவது இடம் பிடித்து நூலிழையில் பதக்கம் வெல்லும் வாய்ப்பை தவறவிட்டுள்ளார்.
அதேப்போன்று ஒருநிலையை 1952 ஹெல்சின்கி ஒலிம்பிக்ஸ் தொடரில் மல்யுத்த வீரர் கேஷவ் மங்காவி என்பவர் சந்தித்தார். 1956 மெல்போர்ன் ஒலிம்பிக்ஸ் தொடரின் போது இந்திய ஆண்கள் கால்பந்து அணி 4வது இடத்தை பிடித்து பதக்கத்தை தவறவிட்டது.
1960 ரோம் ஒலிம்பிக்ஸ் போட்டியின் போது 400 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் THE FLYING SIKH என அழைக்கப்பட்ட மில்கா சிங் பதக்கம் வெல்லும் வாய்ப்பை இழந்தார்.
1972ஆம் ஆண்டு நடந்த முனிக் ஒலிம்பிக்ஸ் தொடரில் மல்யுத்தம் பிரிவில் இந்திய வீரர்களான பிரேம்நாத், சுதேஷ் குமார் ஆகியோரும் நூலிழையில் பதக்கத்தை தவறவிட்டுள்ளனர். 1984 லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக்சில் 400 மீட்டர் தடை தாண்டுதல் ஓட்டப்பந்தயத்தில் தடகள மங்கை என அழைப்படும் பிடி உஷாவும், மல்யுத்த வீரர் ரஜிந்தர் சிங்கும் பதக்கத்தை நூலிழையில் தவறவிட்டனர்.
2004 ஏதென்ஸ் ஒலிம்பிக்சில் டென்னிஸ் வீரர்கள் லியாண்டர் பயஸ், மகேஷ் பூபதியும், பளு தூக்குதலில் குஞ்சுராணி தேவியும், 2012 லண்டன் ஒலிம்பிக்சில் துப்பாக்கி சுடுதலில் ஜாய்தீப் கர்மாகரும் இந்தியாவிற்காக பதக்கம் வெல்லும் வாய்ப்பை தவறவிட்டனர்.
துப்பாக்கி சுடுதல் வீரர் அபினவ் பிந்த்ராவும், டென்னிஸ் போட்டியில் கலப்பு இரட்டையர் பிரிவில் சானியா மிர்சா, ரோகன் போபண்ணாவும், ஜிம்னாஸ்டிக் வீராங்கனை தீபா கர்மாகரும் 2016 ரியோ ஒலிம்பிக்ஸ் தொடரில் பதக்கத்தை தவறவிட்டுள்ளனர்.
2020 டோக்கியோ ஒலிம்பிக்ஸ் தொடரில் கோல்ப் போட்டியில் அதீதி அசோக் மற்றும் இந்திய மகளிர் ஹாக்கி அணி நூலிழையில் பதக்கத்தை தவறவிட்டது. இந்த வரிசையில் தற்போது துப்பாக்கிச்சுடுதல் வீரர் அர்ஜுன் பபுதா இடம்பிடித்துள்ளார். நடப்பு பாரிஸ் ஒலிம்பிக்சில் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் துப்பாக்கிச்சுடுதல் பிரிவில் கடுமையாக முயற்சித்த அவர் 4வது இடம்பிடித்து பதக்கத்தை நூலிழையில் மிஸ் செய்துள்ளார்.