பிரான்ஸ் நாட்டின் தலைநகர் பாரிஸில் கடந்த ஜூலை மாதம் 26-ஆம் தேதி தொடங்கிய ஒலிம்பிக் திருவிழா, கடந்த ஆகஸ்ட் 11ஆம் தேதியுடன் நிறைவு பெற்றது. இந்தப் போட்டியில் 206 நாடுகளைச் சேர்ந்த 10,714 வீரர்கள், வீராங்கனைகள் பங்கேற்று தங்களது திறமைகளை நிரூபித்து பதக்கங்களை வேட்டையாடினர்.
இந்தியா சார்பில், 117 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றதில், அவர்கள் 5 வெண்கலம் மற்றும் 1 வெள்ளிப் பதக்கத்துடன் 6 பதக்கங்களைக் கைப்பற்றினர்.
இதைத்தொடர்ந்து 17-வது பாராலிம்பிக் போட்டிகள், அதே பாரிஸ் நகரில் ஆகஸ்ட் 28ஆம் தேதி தொடங்கியது. பாராலிம்பிக் தொடரில் மாற்றுத்திறனாளிகள், நிரந்தர காயமுற்றவர்கள், உடல் உறுப்பு குறைபாடுடைய 4.400 வீரர், வீராங்கனைகள் 22 விதமான போட்டிகளில் 549 பதக்கங்களுக்காக பங்கேற்று விளையாடி வருகின்றனர். இந்தியா சார்பில் 84 வீரர், வீராங்கனைகள் பாரிஸ் பாராலிம்பிக்கில் கலந்துகொண்டு இருக்கின்றனர்.
2024 பாராலிம்பிக்ஸ் ஆண்கள் ஒற்றையர் SL3 பாரா பேட்மிண்டன் இறுதிப் போட்டியில் வென்று இந்தியாவின் இரண்டாவது தங்கப் பதக்கத்தை நிதேஷ் குமார் வீட்டிற்கு கொண்டு வந்தார்.
விறுவிறுப்பாக நடைபெற்ற போட்டியில் பிரிட்டனை சேர்ந்த டேனியல் பெத்தேலை எதிர்கொண்டு விளையாடிய நிதேஷ் குமார் முதல் செட்டை 21-14 என கைப்பற்றி முன்னிலை வகித்தார். ஆனால் இரண்டாவது செட்டில் கம்பேக் கொடுத்த பெத்தேல் 21-18 என கைப்பற்றி பதிலடி கொடுக்க, தங்கம் யாருக்கு என்ற போட்டியானது இறுதிசெட்டுக்கு நகர்ந்தது.
இறுதி செட்டில் இரண்டு வீரர்களும் தங்களுடைய அபாரமான திறமையை வெளிப்படுத்த, ஆட்டம் இந்தப்பக்கமா அந்த பக்கமா என்ற நிலைக்கே சென்றது. கடைசி நேர பரபரப்பில் தன்னுடைய கண்களையும், கைகளையும் ஷார்ப்பாக வைத்திருந்த நிதேஷ் குமார் 23-21 என்ற செட் கணக்கில் பெத்தேலை வீழ்த்தி தங்கத்தை தட்டிச்சென்றார்.
இது நடப்பு 2024 பாராலிம்பிக் போட்டியில் இந்தியாவுக்கு இரண்டாவது தங்கப்பதக்கமாகும். முதல் தங்கமாக 10 மீட்டர் துப்பாக்கிச் சுடுதல் பிரிவில் இந்திய வீராங்கனை அவனி லேகரா தங்கம் வென்று அசத்தியிருந்தார். இதுவரை இந்திய வீரர்கள் 2 தங்கம், 3 வெள்ளி, 4 வெண்கலம் வென்று பதக்கங்களின் எண்ணிக்கையை 9ஆக உயர்த்தியுள்ளனர்.
நிதேஷ் குமார் 2009-ம் ஆண்டு விசாகப்பட்டினத்தில் நடந்த ரயில் விபத்தில் தன்னுடைய காலை இழந்துள்ளார். அதற்கு பிறகு ஐஐடி நுழைவுத்தேர்வுக்கு கவனம் செலுத்திய நிதேஷ், அதில் தேர்ச்சி பெற்று ஐஐடி மண்டியில் பட்டம் படித்துள்ளார்.
அங்கு தன்னுடைய பேட்மிண்டன் திறமையை கண்டறிந்த நிதேஷ் குமார், பேட்மிண்டனை தன்னுடைய வாழ்க்கையாக மாற்றினார். பேட்மிண்டனில் 2016-ல் ஹரியானா அணியின் ஒரு பகுதியாக பாரா தேசிய சாம்பியன்ஷிப்பில் பங்கேற்ற பிறகு பயணம் தொடங்கியது. அங்கிருந்து தனது முதல் சர்வதேச பட்டத்தை 2017 ஐரிஷ் பாரா-பேட்மிண்டன் இன்டர்நேஷனலில் வென்ற அவர், BWF பாரா பேட்மிண்டன் உலக சர்க்யூட் மற்றும் ஆசிய பாரா விளையாட்டுகளிலும் வெற்றிகளை குவித்துள்ளார்.
2024 பாரீஸ் பாராலிம்பிக்கில் தங்கம் வென்ற நிதேஷ் குமார், ஹரியானாவில் விளையாட்டு மற்றும் இளைஞர் விவகாரத் துறையின் மூத்த பேட்மிண்டன் பயிற்சியாளராகவும் பணியாற்றுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.