பாரிஸ் ஒலிம்பிக் தொடரில் அமெரிக்காவும் சீனாவும் பதக்கங்களைக் குவித்து வருகிறது.
அமெரிக்கா 27 தங்கம், 35 வெள்ளி 33 வெண்கலம் என 95 பதக்கங்களை வென்று முதலிடத்தில் உள்ளது.
சீனா 25 தங்கம், 24 வெள்ளி, 17 வெண்கலம் என மொத்தமாக 66 பதக்கங்களை வென்று இரண்டாம் இடத்தில் உள்ளது.
117 பேர் கொண்ட குழுவுடன் பயணித்துள்ள இந்தியா 3 வெண்கலப் பதக்கங்களை மட்டுமே வென்று பட்டியலில் 69 ஆவது இடத்தில் உள்ளது.
பதக்கங்களின் எண்ணிக்கையைத் தாண்டி, இந்தியாவில் மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் தகுதி நீக்கம் செய்யப்பட்ட சம்பவம்தான் ஒட்டுமொத்த இந்தியர்களையும் நொறுங்கச் செய்துள்ளது. இதனிடையே நூலிழையில் தவறிய பதக்கங்களும் நெஞ்சை கணக்கச் செய்கின்றன.
துப்பாக்கி சுடுதலில் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் ஒற்றையர் பிரிவில் வெண்கல பதக்கம் வென்ற மனு பாக்கர், கலப்பு இரட்டையர் பிரிவிலும் வெண்கல பதக்கம் வென்று இந்தியாவிற்கான பதக்க கணக்கை தொடங்கி வைத்தார். இதன்மூலம் இந்தியாவிற்காக ஒரே ஒலிம்பிக்கில் இரண்டு பதக்கங்கள் வென்ற முதல் வீராங்கனை என்ற வரலாற்று சாதனையை படைத்தார்.
பெண்களுக்கான 25 மீட்டர் பிஸ்டல் இறுதிப் போட்டியிலும் பதக்கத்தை வென்று, ஒரே ஒலிம்பிக்கில் 3 பதக்கங்களை வெல்வார் என எதிர்பார்க்கப்பட்டது. ஏனெனில், இறுதி போட்டியில் தொடக்கம் முதல் ஆதிக்கம் செலுத்திய மனு பாக்கர், 2ஆவது இடத்தில் இருந்தார். இறுதி சமயத்தில் இரண்டு முறை 10.3 புள்ளிகளுக்கு குறைவாக பெற்றதால் பதக்கம் வெல்லும் வாய்ப்பை இழந்து 4ஆம் இடம் பிடித்தார்.
ஆடவருக்கான 10 மீட்டர் ஏர் ரைபிள் துப்பாக்கிச் சுடுதலில், இறுதிப் போட்டியில் அர்ஜூன் பபுதா 208.4 புள்ளிகளுடன் 4 ஆவது இடத்தையே பிடித்தார். வெண்கலப் பதக்கத்தை வென்ற குரேஷியாவின் மிரான் மரிசிச் 209.8 புள்ளிகளைப் பெற்றார். தொடக்கத்தில் சிறப்பாக ஆடிய அர்ஜூன் பபுதா இறுதிஷாட்டில் 9.5 மதிப்பெண்களைப் பெற்று தோல்வி அடைந்தார்.
வில்வித்தைப் போட்டியில் தீரஜ் பொம்மதேவரா மற்றும் அங்கிதா பகத்தும் நான்காவது இடத்தையே பிடித்தனர். அமெரிக்காவின் பிராடி எலிசன் மற்றும் கேசி காஃப்ஹோல்ட் ஆகியோருக்கு எதிரான போட்டியில் தீரஜ் மற்றும் அங்கிதா ஜோடி 6-2 என்ற கணக்கில் தோல்வி அடைந்தது.
ஸ்கீட் துப்பாக்கி சுடுதல் கலப்பு இரட்டையர் பிரிவில் ஒரு புள்ளி வித்தியாசத்தில் பதக்க வாய்ப்பை இந்திய இணையான அனந்த் ஜீத், மகேஷ்வரி சவுகான் இழந்தனர். வெண்கலப் பதக்கத்திற்கான போட்டியில், இந்திய இணை 43-44 என்ற கணக்கில் சீனாவின் ஜியாங் யிட்டிங் மற்றும் லியு ஜியான்லிண்டம் தோல்வி அடைந்தது. அதாவது ஒருபுள்ளியில் தோல்வி அடைந்துள்ளது.
பேட்மிண்டன் ஆடவர் ஒற்றையர் பிரிவு அரையிறுதி ஆட்டத்தில் முதல் சுற்றில் முன்னிலை பிடித்த லக்க்ஷயா சென் அடுத்த சுற்றில் போராடி தோல்வி அடைந்தார். ஒலிம்பிக் பேட்மிண்டனில் அரையிறுதிக்கு முன்னேறிய முதல் இந்திய வீரர் என்ற பெருமையைப் பெற்றிருந்த லக்ஷயா சென், வெண்கலப் பதக்கத்திற்கான போட்டியில் மலேசிய வீரரிடம் தோல்வி அடைந்தார். முதல் சுற்றை 16-21 என்ற கணக்கில் வென்றிருந்தாலும், அடுத்த இரு சுற்றுகளில் 16-21, 11-21 என்ற கணக்கில் தோல்வி அடைந்தார்.
அரையிறுதியில் லக்ஷயா சென்னை வென்றிருந்த டென்மார்க் வீரரான ஆக்செல்சன், லக்ஷயா சென் திறமையான வீரர் என்றும் இது மிகக் கடுமையான போட்டியாக இருந்தது என்றும் அவருக்கு சிறப்பான எதிர்காலம் இருக்கிறது என்றும் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
பளுதூக்குதல் போட்டியில் டோக்கியோ ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்ற மீராபாய், பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் நான்காவது இடத்தையே பிடித்தார். 49 கிலோ எடைப்பிரிவில் 199 புள்ளிகளுடன் இந்திய வீராங்கனை மீராபாய் சானு பதக்கம் வெல்லும் வாய்ப்பை இழந்தார். போட்டியின் தொடக்கத்தில் அவர் சிறப்பான திறனை வெளிப்படுத்தினார். இந்த ஒலிம்பிக் தொடருக்கு முன்னதாக அவர் தொடர்ச்சியான காயங்களை எதிர்கொண்டார். 2022 ஆம் ஆண்டில் பயிற்சியின் போதே அவருக்கு கடுமையான காயம் ஏற்பட்டது. காயங்கள் அவரது திறனில் தாக்கத்தை ஏற்படுத்தியதுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.