2024 பாரீஸ் ஒலிம்பிக்கில் கிரேக்க-ரோமன் மல்யுத்தத்தில் பங்கேற்று விளையாடிய கியூபாவின் 41 வயது மல்யுத்த ஜாம்பவான் மிஜைன் லோபஸ், தன்னுடைய 5வது தங்கம் வென்று புதிய சாதனையை தன்பெயரில் எழுதியுள்ளார்.
ஒலிம்பிக் வரலாற்றில் அதிகப்படியாக 4 தனிநபர் தங்கங்களை வென்றிருந்த அமெரிக்காவின் மைக்கேல் ஃபெல்ப்ஸ் (நீச்சல்), கார்ல் லூயிஸ் (நீளம் தாண்டுதல்), ஆல்ஃபிரட் ஓர்டர் (வட்டு எறிதல்) மற்றும் டென்மார்க்கின் பால் எல்வ்ஸ்ட்ரோம் (படகோட்டம்) முதலிய சொற்ப வீரர்களில் கியூபாவின் மல்யுத்த வீரர் மிஜைன் லோபஸ் வீரரும் இணைந்திருந்தார்.
இந்நிலையில் தனிநபர் பிரிவில் அதிகப்படியாக 5 தங்கப்பதங்களை வெல்ல முடிவெடுத்த மிஜைன் லோபஸ், 2024 பாரீஸ் ஒலிம்பிக்கில் தன்னுடைய வாழ்க்கையை உயரடுக்கில் முடிக்க முடிவுசெய்தார்.
2024 பாரீஸ் ஒலிம்பிக்கிற்கு முன்னதாக பேசியிருந்த லோபஸ், “நான் மீண்டும் பாரீஸ் ஒலிம்பிக் போட்டிகளில் மல்யுத்தம் செய்ய வருகிறேன். ஐந்து ஒலிம்பிக் தங்கப் பதக்கங்களை வென்ற முதல் மல்யுத்த வீரராக என் விளையாட்டு வாழ்க்கையை முடிக்க விரும்புகிறேன்" என்று கூறியதாக யுனைடெட் வேர்ல்ட் மல்யுத்தம் மேற்கோள் காட்டியது.
2024 பாரிஸ் ஒலிம்பிக்ஸில் 130 கிலோ எடைப்பிரிவு கிரேக்க-ரோமன் மல்யுத்ததில் இறுதிப்போட்டிவரை முன்னேறிய கியூபா ஜாம்பவான் மிஜைன் லோபஸ், இறுதிப்போட்டியில் சிலி வீரர் யாஸ்மானி அகோஸ்டாவை 6-0 என தோற்கடித்து தங்கம் வென்றார்.
இதன்மூலம் ஒலிம்பிக் வரலாற்றில் 5 முறை தங்கம் வெல்லும் முதல்வீரர் மற்றும் தொடர்ச்சியாக தனிநபர் பிரிவில் 5முறை தங்கம் வெல்லும் முதல் வீரர் என்ற வரலாற்று சாதனை படைத்தார். போட்டிக்கு பிறகு தன்னுடைய ஷூவை கழற்றி மேடையில் வைத்த மிஜைன் லோபஸ், தங்கம் வென்ற மேடையிலேயே தன்னுடைய அதிகாரப்பூர்வ ஓய்வை அறிவித்தார்.
5வது தங்கம் வென்றது குறித்து பேசிய லோபஸ், “சொல்லமுடியாத பெரிய மகிழ்ச்சி எனக்கு கிடைத்துள்ளது. இதைதான் என் வாழ்க்கையில் நான் செய்துமுடிக்க ஏங்கிக் கொண்டிருந்தேன். ஒட்டுமொத்த உலகத்திற்கும் எனது நாட்டிற்காகவும் ஒலிம்பிக்கில் ஒரு உயரடுக்கில் முடித்ததில் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். இவ்வளவு வருடம் என் குடும்பத்தினருடன் சேர்ந்து கடினமாக உழைத்ததற்கு இன்று வாழ்நாள் வெகுமதி கிடைத்துள்ளது. இது மிகப்பெரிய வெற்றி” என்று தன் அதிகப்படியான மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.
மிஜைன் லோபஸ்ஸின் 5 தங்கங்கள்:
* 2008 - பெய்ஜிங் ஒலிம்பிக்ஸ் - தங்கம்
* 2012 - லண்டன் ஒலிம்பிக்ஸ் - தங்கம்
* 2016 - ரியோ ஒலிம்பிக்ஸ் - தங்கம்
* 2020 - டோக்கியோ ஒலிம்பிக்ஸ் - தங்கம்
* 2024 - பாரீஸ் ஒலிம்பிக்ஸ் - தங்கம்