பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் ஞாயிற்றுக்கிழமை இரவு ஆடவர் இரட்டையர் பிரிவு டென்னிஸ் போட்டி நடைபெற்றது. இதில், ஸ்ரீராம் பாலாஜியுடன் இணைந்து விளையாடிய போபண்ணா, பிரெஞ்சு ஆட்டக்காரர்களான எட்வர்ட் ரோஜர் மற்றும் மான்ஃபில்ஸ் இணையிடம் முதல் சுற்றிலேயே தோல்வி அடைந்து வெளியேறியது.
இந்நிலையில்தான் ஓய்வு பெறுவதாக போபண்ணா அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
1996 ஆம் ஆண்டு அட்லாண்டாவில் நடந்த ஒலிம்பிக்ஸில் டென்னிஸ் போட்டியில் லியாண்டர் பயஸ் வெண்கலப்பதக்கம் வென்றார். இதன்பின் டென்னிஸில் இந்தியா பதக்கம் வெல்லவில்லை. முன்னதாக 2016 ரியோ ஒலிம்பிக்ஸில் கலப்பு இரட்டையர் பிரிவில் சானியா மிர்சாவுடன் களம் கண்ட போபண்ணா, 4ஆவது இடம்பிடித்து நூலிழையில் பதக்கத்தை தவறிவிட்டிருந்தார்.
ஆட்டத்தின்போது உள்ளூர் ஆட்டக்காரர்களுக்கு ரசிகர்களின் ஆதரவு அதிகமாக இருந்தது. முன்னதாக டென்னிஸ் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் ஸ்மித் நாகல் பிரெஞ்சு ஆட்டக்காரர் கொரெண்டின் மௌட்டை எதிர்த்து ஆடினார். அப்போதும் பிரெஞ்சு ஆட்டக்காரருக்கு உள்ளூர் ரசிகர்களின் ஆதரவு அபாரமாக இருந்தது.
ஓய்வு முடிவு குறித்து பேசிய போபண்ணா, இந்தியாவுக்காக பாரிஸ் ஒலிம்பிக்கே தனது கடைசி ஆட்டம் என கூறினார். தொடர்ந்து பேசிய அவர், “டென்னிஸில் தற்போது தான் இருக்கும் நிலையே எதிர்பார்க்காத வளர்ச்சி. இந்தியாவுக்காக 20 ஆண்டுகள் விளையாடுவேன் என நினைக்கவில்லை. 2002 ஆம் ஆண்டு அறிமுகமாகி 22 ஆண்டுகளுக்குப் பிறகும் இந்தியாவைப் பிரதிநிதிப்படுத்துவதற்குப் பெருமைப்படுகிறேன்” என தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே டேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டியில் இருந்து ஓய்வை அறிவித்த போபண்ணா, ஒலிம்பிக் பதக்கத்துடன் சர்வதேச களத்தில் இருந்து ஓய்வு பெற எண்ணியிருந்த நிலையில், ஏமாற்றத்துடன் விடைபெற்றுள்ளார்.
நடப்பாண்டு ஜனவரியில் ஆஸ்திரேலிய ஓபன் மூலம் தனது முதல் கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வென்றிருந்த போபண்ணா, தனது டென்னிஸ் வாழ்க்கையில் 26 பட்டங்களை வென்றிருக்கிறார்.