2024 பாரீஸ் ஒலிம்பிக்கில் பல வீரர்கள் பலவிதமான பின்புலத்திலிருந்து வந்து பதக்கங்களை வென்றுள்ளனர், சிலர் புதிய சாதனையையும், சிலர் தனது நாட்டிற்கான முதல் பதக்கத்தையும், சிலர் ஆயிரக்கணக்கான மக்களை மட்டுமே கொண்டுள்ள நாட்டிலிருந்து வந்து உலகை திரும்பி பார்க்கவும் செய்துள்ளனர்.
அந்தவகையில் ஆஸ்திரேலியாவின் 14 வயது சிறுமியான அரிசா ட்ரூ என்பவர், தனக்கு செல்ல வாத்து வேண்டும் என்பதற்காக ஒலிம்பிக்கில் கலந்துகொண்டு பதக்கம் வென்றுள்ளார். பெண்களுக்கான ஸ்கேட்போர்டு பார்க் இறுதிப்போட்டியில் பங்கேற்று தங்கம் வென்றபிறகு “தனக்கு செல்ல வாத்து வேண்டும்” என செய்தியாளர்களிடம் அவர் கூறியிருப்பது எல்லோருடைய மனதையும் கவர்ந்துள்ளது.
2024 பாரீஸ் ஒலிம்பிக் பெண்களுக்கான ஸ்கேட்போர்டு பார்க் இறுதிப்போட்டியானது கடந்த செவ்வாய் கிழமை நடைபெற்றது. அதில் பங்கேற்ற 14 வயதேயான ஆஸ்திரேலியாவின் ஸ்கேட்போர்டு வீராங்கனை அரிசா ட்ரூ, இறுதிப்போட்டியில் கடந்த ஒலிம்பிக்கில் தங்கம்பதக்கம் வாங்கிய ஜப்பான் வீராங்கனையை பின்னுக்கு தள்ளி 93.18 புள்ளிகளுடன் தங்கப்பதக்கத்தை தட்டிச்சென்றார்.
அவரைத்தொடர்ந்து 16 வயதேயான ஜப்பானின் கோகனா ஹிராகி 92.63 புள்ளிகளுடன் வெள்ளிப்பதக்கமும், பிரிட்டனின் ஸ்கை பிரவுன் 92.31 புள்ளிகளுடன் வெண்கலப் பதக்கமும் வென்றனர்.
2024 பாரீஸ் ஒலிம்பிக்கில் ஸ்கேட்போர்டு பார்க்கில் 14 வயதில் தங்கம் வென்றதன் மூலம் ஆஸ்திரேலியாவுக்கு குறைந்த வயதில் தங்கம் வென்ற இளம் வீராங்கனை என்ற சாதனையை படைத்து அரிசா ட்ரூ அசத்தியுள்ளார். அதேபோல வெள்ளிப்பதக்கம் வென்ற 16 வயதான ஜப்பானின் ஹிராக்கி, 2020 டோக்கியோ ஒலிம்பிக்கில் 12 வயதில் வெண்கலம் வென்றபோது ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற ஜப்பானின் இளம் வீராங்கனை என்ற சாதனையை படைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
பாரீஸ் ஒலிம்பிக்கில் ஸ்கேட்போர்டில் தங்கம் வென்றபிறகு செய்தியாளர்களிடம் பேசிய அரிசா ட்ரூ, தங்கப் பதக்கம் வென்றால் செல்ல வாத்து ஒன்றைப் பெற்றுக் கொள்ளலாம் என்று அவரின் பெற்றோர் வாக்குறுதி அளித்ததாகக் கூறினார்.
மேலும் "வாத்துகள் மிகவும் அழகாக இருக்கின்றன, எனக்கு ஒரு செல்ல வாத்து வேண்டும்" என்று ட்ரூ வழக்கத்திற்கு மாறான தன்னுடைய பரிசை கேட்டது பார்ப்பவர்களின் மனதை கவரும் வகையில் அமைந்தது.
"நாய் அல்லது பூனையைப் பெற என் பெற்றோர் நிச்சயமாக அனுமதிக்க மாட்டார்கள், ஏனென்றால் நாங்கள் இப்போது நிறைய பயணம் செய்கிறோம், ஆனால் ஒரு வாத்து கொஞ்சம் எளிதாக இருக்கும் (அதிகப்படியான செலவை மனதில் வைத்து) என்று நான் உணர்கிறேன்" மேலும் தொடர்ந்த அவர், “எனக்குத் தெரியாது, எனக்கு ஒரு வாத்து வேண்டும்” என செல்லமாக சிரித்துக்கொண்டே கூறினார்.
தங்கம் வென்றது குறித்து பேசிய ட்ரூ, “நான் கடைசி சுற்றுவரை பின் தங்கியே இருந்தேன், இறுதியில் நான் தேர்வுசெய்யப்பட்டபோது எனக்கு ஆச்சரியமாகவும், சொல்லமுடியாத மகிழ்ச்சியாகவும் இருந்தது. என் கழுத்தில் தற்போது தங்கப் பதக்கம் இருப்பது ஆச்சரியமாக இருக்கிறது.
2020 டோக்கியோ ஒலிம்பிக்கைப் பார்த்ததில் இருந்தே இது எனது குறிக்கோள். அது என்னை ஊக்கப்படுத்தியது மற்றும் இந்த ஒலிம்பிக்கிற்கு வந்து மேடைக்கு வர வேண்டும் என்று என்னை தூண்டியது. தற்போது நான் தங்கம் வென்றுவிட்டேன் ஆச்சரியமாக இருக்கிறது” என்று மீண்டும் தன் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.
இதையும் படிக்க: மேல்முறையீட்டில் தகுதிநீக்கம் ரத்து|போராடிவென்ற கென்ய வீராங்கனை! வினேஷ் போகத்திற்கு வாய்ப்பு எப்படி?
மகளின் வெற்றியை பார்த்த ட்ரூவின் பெற்றோர்களுக்கு மகிழ்ச்சியை வெளிப்படுத்த சரியான வார்த்தை கிடைக்கவில்லை, “என்ன சொல்வது என்று தெரியவில்லை, எங்களால் இதை நம்ப முடியவில்லை. சொல்ல முடியாதளவு மகிழ்ச்சியாக இருக்கிறது” என்று கூறியுள்ளனர்.