செய்தியாளர்: சந்தானகுமார்
பெங்களூருவைச் சேர்ந்த தீனிதி தேசிங்குக்கு மூன்று வயதாகியும் சரியாக பேச்சுவரவில்லை. எப்படியாவது மகளை பேச வைத்துவிடவேண்டும் என்று நினைத்த தீனிதியின் பெற்றோர், 6 வயதில் அவரை நீச்சல் பயிற்சிக்காக சேர்த்தனர். புதிய மனிதர்களோடு மகள் பழகினால் பேச்சு எளிதாக வரும் என்பதுதான் அவர்களின் எண்ணமாக இருந்தது. ஆனால் அங்கு தீனிதிக்கு பயம் மட்டுமே இருந்தது, தண்ணீருக்குள் செல்ல பிடிக்கவில்லை. அடுத்த ஆண்டு மீண்டும் நீச்சல் பயிற்சிக்கு சென்ற போதும் அதே பயம் இருக்க அவருடைய பெற்றோர்கள் தீனிதியுடன் இறங்கி அவருக்கு பயிற்சியை வழங்கினர்.
இப்படி 7 வயதில் நீச்சல் பயணத்தை தொடங்கிய தீனிதி அடுத்த 7 ஆண்டுகளில் ஒலிம்பிக் போட்டிக்கு சென்றுள்ளார் என்பதை பார்த்தால் மிகப்பெரிய ஆச்சரியமே நமக்கு கிடைக்கும். நீச்சல் கற்றுக்கொண்டாலும் போட்டிகளில் வெற்றி பெறுவது என்பது அவருக்கு எளிமையாக அமையவில்லை. ஒவ்வொரு போட்டிக்கு முன்பும், தீனிதிக்கு உடல்நிலை பாதிப்படைவது வழக்கமாக இருந்தது. எதற்கு மகளை இப்படி பாடு படுத்துகிறோம் என்று ஒரு கட்டத்தில் தேசிங்கு-ஜெசித்தா தம்பதி நினைத்துள்ளனர்.
அனைத்தும் ஒரு புள்ளியில் திடீரென மாறிவிடும் என்று நம்புவோமே... அப்படி ஒரு தருணம் தீனிதிக்கு மங்களூருவில் அமைந்தது. மங்களூருவில் நடந்த மாநில அளவிலான போட்டியில் பங்கேற்க சென்றபோது, அதேபோல தீனிதிக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டது. ‘இது ஒரு கடைசி முயற்சி.. இதற்கு மேல் மகளை துன்பப்படுத்தவேண்டாம்’ என்ற எண்ணத்தில் போட்டிக்களத்துக்கு அழைத்துச்சென்றார் ஜெசித்தா. அன்று நீச்சல் குளத்தில் இறங்கிய தீனிதி தனது முதல் தங்கத்தை கைப்பற்றினார்.
அந்த ஒரு புள்ளி தீனிதியின் வாழ்க்கையை புரட்டிப்போட்டது. நீச்சல் குளத்திலேயே தனது பெரும்பாலான நேரத்தை கழித்த தீனிதி, இந்தியாவில் இளம் வயதில் 7 முறை தேசியப் போட்டிகளில் தங்கம் வென்றது மட்டும் இல்லாமல் 200 மீட்டர் பிரிவில் தேசிய சாதனை படைத்துள்ளார். 13 வயதில் ஆசிய விளையாட்டு போட்டியில் பங்கேற்ற தீனிதி, 14 வயதில் ஒலிம்பிக் போட்டிக்குச் சென்றுள்ளார். இங்கும் சாதிப்பார் என்று நாமும் நம்பிக்கையுடன் இருப்போம்.