டோக்கியோ ஒலிம்பிக் தொடரை ரத்து செய்யும் திட்டமில்லை என சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி தெரிவித்துள்ளது.
உலகின் மிகப்பெரிய விளையாட்டுத் திருவிழாவான ஒலிம்பிக் போட்டி ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் ஜூலை 24ம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 9ம் தேதி வரை நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே கொரோனா வைரஸ் 192 நாடுகளுக்குப் பரவி, உலகையே அச்சுறுத்தி வருகிறது. இதுவரை உலகம் முழுவதும் 3, 36, 075 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், 14,613 பேர் உயிரிழந்துள்ளனர். உலகம் முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 97, 636 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
இதனால் டோக்கியோவில், ஜூலை மாத இறுதியில் திட்டமிட்டபடி ஒலிம்பிக் தொடர் நடைபெறுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இந்நிலையில் சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி தலைவர் தாமஸ் பாஹ் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஒலிம்பிக் போட்டிகளை தள்ளி வைப்பது உள்ளிட்ட அம்சங்களை விவாதிக்கவுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். ஒலிம்பிக் போட்டிகள் குறித்த இறுதி முடிவு நான்கு வாரங்களுக்குள் எடுக்கப்படும் எனவும் டோக்கியோ ஒலிம்பிக் தொடரை ரத்து செய்யும் திட்டமில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.