வழக்கத்தை விட எளிமையான முறையில் அடுத்தாண்டு டோக்கியோ ஒலிம்பிக் தொடர் நடைபெறும் எனக் கூறப்படுகிறது.
சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியும் டோக்கியோ ஒலிம்பிக்கை நடத்தும் அமைப்பும் ஆன்லைன் வழியாக ஆலோசனை நடத்தின. பின்னர், செய்தியாளர்களை சந்தித்த டோக்கியோ ஒலிம்பிக்கின் தலைமை செயல் அதிகாரி டோஷிரோ முடோ, வழக்கமான முறையில் பெரும் பொருட்செலவில் டோக்கியோ ஒலிம்பிக் நடைபெறாது என தெரிவித்தார்.
ஒலிம்பிக் ஓராண்டு தள்ளிவைக்கப்பட்டதால் ஏற்பட்ட வருவாய் இழப்பை ஈடுசெய்யும் பொருட்டு இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அவர் கூறினார். மேலும், வீரர்கள், பார்வையாளர்கள் நீங்கலாக ஒலிம்பிக் தொடரில் பங்கேற்பவர்களின் எண்ணிக்கையை குறைக்கவும் திட்டமிட்டு வருவதாக அவர் கூறினார். அதாவது, விளையாட்டு சங்கங்களின் சில பிரதிநிதிகள், போட்டி அமைப்பாளர்கள் என பலர் ஒலிம்பிக்கில் பங்கேற்க முடியாத நிலை ஏற்படலாம் என கூறப்படுகிறது.
தனி மனித இடைவெளியை உறுதி செய்யும் வகையில் இந்த முடிவை சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி எடுக்கலாம் எனவும் சொல்லப்படுகிறது.