நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்டில் வங்கதேச அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வென்று, வரலாற்று சிறப்புமிக்க வெற்றியை பதிவு செய்துள்ளது.
நியூசிலாந்து சென்றுள்ள வங்காளதேச கிரிக்கெட் அணி, இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. 2001ஆம் ஆண்டிலிருந்து நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடும் வங்கதேசம் இதுவரை அங்கு ஒரு வெற்றியை கூட பதிவு செய்ததில்லை. இந்நிலையில் நியூசிலாந்து - வங்கதேச அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி மவுன்ட் மாங்கானுவில் நடந்தது.
இதில் முதலில் பேட் செய்த நியூசிலாந்து 328 ரன்கள் எடுத்தது. பின்னர் தனது முதல் இன்னிங்சை ஆடிய வங்காளதேச அணி, 4-வது நாளான நேற்று 176.2 ஓவர்களில் 458 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தது.
அடுத்து 130 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்சை விளையாடிய நியூசிலாந்து அணி 74.4 ஓவர்களில் 169 ரன்னுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதையடுத்து 40 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய வங்கதேச அணி 16.5 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை மட்டும் இழந்து இலக்கை எட்டி வரலாற்று வெற்றியை ருசித்தது.