ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் முன்னணி வீரர் நோவோக் ஜோகோவிச் கலந்துகொள்ளலாம் என ஆஸ்திரேலிய நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
கொரோனா பரவல் உலகெங்கும் மீண்டும் அதிகரித்து வருகிறது. இதனால் பல்வேறு நாடுகளும், தடுப்பூசி கட்டாயம், பொது இடங்களில் முகக் கவசம், தனி மனித இடைவெளி உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. இந்நிலையில், டென்னிஸ் உலகில் நம்பர் ஒன் வீரரும், 9 முறை ஆஸ்திரேலிய ஓபன் பட்டத்தை வென்றவருமான செர்பியாவின் நோவோக் ஜோகோவிச், ஜனவரி 17-ம் தேதி துவங்கும், ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் பங்கேற்பதற்காக விமானம் மூலம் கடந்த புதன்கிழமை மெல்போர்ன் நகருக்கு சென்றார்.
அப்போது கொரோனா தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு மட்டுமே ஆஸ்திரேலிய ஓபனில் பங்கேற்க அனுமதி என்று அறிவிக்கப்பட்டு இருந்ததால், தடுப்பூசி செலுத்தாத காரணத்தால், நோவோக் ஜோகோவிச் ஆஸ்திரேலியாவுக்குள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டது. மேலும், ஆஸ்திரேலிய எல்லை பாதுகாப்புப் படை அதிகாரிகள், அவரது விசாவை ரத்துசெய்து, மெல்போர்னில் ஒரு விடுதியில், ஜோகோவிச் தனிமைப்படுத்தப்பட்டு தடுப்புக்காவலில் வைக்கப்பட்டார்.
இதையடுத்து தனக்கு எதிரான நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து, ஜேகோவிச் ஆஸ்திரேலிய ஓபனில் பங்கேற்க அனுமதி அளிக்க வேண்டும என்று மேல்போர்னில் உள்ள பெடரல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு விசாரணை முடிந்தநிலையில், இன்று தீர்ப்பளித்த நீதிமன்றம் ஜோகோவிச்சின் விசாவை ரத்துசெய்த ஆஸ்தீரேலிய அரசின் முடிவை ரத்து செய்துள்ளது.
ஆஸ்திரேலிய நீதிமன்றம் தீர்ப்பு வெளியான 30 நிமிடங்களில் தடுப்புக் காவல் மையத்திலிருந்து ஜோகோவிச்சை விடுவிக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதன்மூலம் ஜோகோவிச் ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸில் பங்கேற்பதற்கான வாய்ப்பு உறுதியாகி உள்ளது.