”டெஸ்ட் போட்டிகளில் துணை கேப்டன் பதவியே தேவையில்லை” .. - ரவி சாஸ்திரி

”டெஸ்ட் போட்டிகளில் துணை கேப்டன் பதவியே தேவையில்லை” .. - ரவி சாஸ்திரி
”டெஸ்ட் போட்டிகளில் துணை கேப்டன் பதவியே தேவையில்லை” .. - ரவி சாஸ்திரி
Published on

”டெஸ்ட் போட்டிகளில் துணை கேப்டன் பதவி என்ற ஒன்று தேவையில்லாதது” என இந்திய அணியின் முன்னாள் தலைமைப் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் ஆஸ்திரேலிய அணி, டெஸ்ட் மற்றும் ஒருநாள் கிரிக்கெட் தொடர்களில் பங்கேற்று விளையாடி வருகிறது. இவ்விரு அணிகளுக்கான 4 போட்டிகள் கொண்ட பார்டர் - கவாஸ்கர் கிரிக்கெட் தொடர், தற்போது நடைபெற்று வருகிறது. இதில் முதல் இரண்டு போட்டிகளில் இந்திய அணி வெற்றிபெற்று, முன்னிலையில் இருப்பதுடன், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிச்சுற்றில் பங்கேற்பதற்கான அணிகளின் புள்ளிப் பட்டியலிலும் முன்னேறியிருக்கிறது. இந்த நிலையில் இவ்விரு அணிகளுக்கான 3வது போட்டி வரும் மார்ச் 1ஆம் தேதி இந்தூரில் நடைபெற இருக்கிறது. இதற்கிடையே அடுத்த இரண்டு டெஸ்ட் போட்டிகளுக்கான இந்திய அணி வீரர்கள் அறிவிக்கப்பட்டனர்.

அதில் கே.எல்.ராகுலுக்கு வழங்கப்பட்டிருந்த துணை கேப்டன் பதவி பறிக்கப்பட்டு, சாதாரண ஒரு வீரராக இடம்பெற்றுள்ளார். ராகுலுக்கு துணை கேப்டன் பதவி பறிக்கப்பட்டது குறித்து பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். இதுகுறித்து பதிலளித்த இந்திய அணியின் முன்னாள் தலைமைப் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி, ”துணை கேப்டன் குறித்து நிர்வாகம்தான் முடிவெடுக்க வேண்டும். ஆனால், என்னைக் கேட்டால் இந்திய டெஸ்ட் அணிக்கு துணைக கேப்டனே தேவையில்லை என்றுதான் கூறுவேன். இந்திய களங்களில் சிறந்த 11 வீரர்களுடன்தான் செல்ல வேண்டும். துணை கேப்டன் என்ற பொறுப்பைக் கொண்டுவந்து சிக்கலை உண்டாக்கிக்கொள்ளக் கூடாது. வெளிநாட்டு மைதானங்களில் வேறுவிதமான அணியுடன் விளையாடுவோம். இருப்பினும், நாம் சிறப்பாகத்தான் விளையாடி வருகிறோம். ஆகையால், துணை கேப்டன் பதவி என்ற ஒன்று தேவையில்லாதது’’ எனத் தெரிவித்துள்ளார்.

கே.எல்.ராகுல் கடந்த இரண்டு போட்டிகளிலும் சரியாக விளையாடததாலேயே அவர் மீது கடும் விமர்சனம் எழுந்து வருகிறது. அதற்குப் பதில் நல்ல ஃபார்மில் இருக்கும் ஷுப்மன் கில்லை அணியில் இறக்காததும் விமர்சனத்துக்குள்ளாகி வந்த நிலையில்தான், கே.எல்.ராகுலின் துணை கேப்டன் பதவி பறிக்கப்பட்டது. அவர் நாக்பூரில் நடைபெற்ற முதல் டெஸ்டில் 17 ரன்களையும் (முதல் இன்னிங்ஸ் மட்டும்) டெல்லியில் நடைபெற்ற 2வது டெஸ்டில் 17 மற்றும் 1 ரன்களில் நடையைக் கட்டினார். இதனாலேயே அவர்மீது விமர்சனம் எழுந்துவருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

- ஜெ.பிரகாஷ்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com