"வருத்தப்பட நேரமில்லை; அடுத்த இலக்கு வெண்கலம்" - இந்திய ஹாக்கி கேப்டன் மன்ப்ரீத் சிங்

"வருத்தப்பட நேரமில்லை; அடுத்த இலக்கு வெண்கலம்" - இந்திய ஹாக்கி கேப்டன் மன்ப்ரீத் சிங்
"வருத்தப்பட நேரமில்லை; அடுத்த இலக்கு வெண்கலம்" - இந்திய ஹாக்கி கேப்டன் மன்ப்ரீத் சிங்
Published on

அரையிறுதியில் பெற்ற தோல்விக்கு இப்போது வருத்தப்பட நேரமில்லை என்றும் வெண்கலத்துக்கான போட்டியை வெல்வதே அடுத்த இலக்கு என்றும் இந்திய ஹாக்கி அணியின் கேப்டன் மன்ப்ரீத் சிங் தெரிவித்துள்ளார்.

டோக்கியோ ஒலிம்பிக்கில் ஆடவர் ஹாக்கி அணிக்கான அரையிறுதிப் போட்டி இன்று நடைபெற்றது. இதில் இந்தியா - பெல்ஜியம் அணிகள் மோதின. மிகவும் பரபரப்பாக நடைபெற்ற இந்தப் போட்டியில் பெல்ஜியம் அணி 5-2 என்ற கோல் கணக்கில் இந்தியாவை வீழ்த்தியது. இதனையடுத்து இன்று நடைபெறும் மற்றொரு அரையிறுதியில் தோற்கும் அணியுடன் இந்தியா வெண்கலப் பதக்கத்துக்காக மோத இருக்கிறது. இந்தியா தன்னுடைய அடுத்தப் போட்டியில் ஆஸ்திரேலியா அல்லது ஜெர்மணி அணியை எதிர்கொள்ளும்.

இது குறித்து பேசிய மன்ப்ரீத் சிங் "இந்தத் தோல்வியை ஒத்துக்கொள்ள மிகவும் கடினமாக இருக்கிறது. இந்தப் போட்டியை வெற்றிப்பெற வேண்டும் என்ற எண்ணத்தில்தான் களமிறங்கினோம். ஆனால் எங்களால் வெற்றிப்பெற முடியவில்லை. இப்போது நாங்கள் அடுத்தது வெண்கலப் பதக்கத்துக்கான போட்டியை குறி வைத்து இருக்கிறோம். அதற்காக தயாராக வேண்டும். நிச்சயம் வெண்கலத்தை வெல்வோம் என்ற நம்பிக்கை இருக்கிறது. நீண்ட ஆண்டுகளுக்கு பிறகு அரையிறுதியில் விளையாடியது மகிழ்ச்சியாக இருக்கிறது" என்றார்.

மேலும் பேசிய அவர் "ஒரு அணியாக 4 ஆண்டுகளாக சிறப்பாகவே செயல்பட்டு வருகிறோம். ஆனால் இப்போதைக்கு தோல்வி குறித்து வருத்தப்படவோ மனம் வருந்தவோ நேரமில்லை. அடுத்த இலக்கான வெண்கலத்தை நோக்கி நாங்கள் நகர்ந்து வருகிறோம். நிச்சயம் வெண்கலத்தை வென்று நாட்டுக்கு பெருமை சேர்க்க வேண்டும் என்று தீர்கமாக நினைக்கிறோம்" என்றார் மண்ப்ரீத் சிங்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com