கேப்டன்சி தொடர்பாக விராட் கோலிக்கும், ரோகித் சர்மா இடையே போட்டியிருப்பதாக எனக்குத் தெரியவில்லை என்று இந்திய அணியின் முன்னாள் பேட்டிங் பயிற்சியாளர் சஞ்சய் பாங்கர் தெரிவித்துள்ளார்.
அண்மைக்காலமாக ரோகித் சர்மா இந்திய டி20 அணிக்கு கேப்டனாக பொறுப்பேற்க வேண்டும், அது கோலியின் சுமையைப் பெருமளவு குறைக்கும் எனப் பல கிரிக்கெட் வீரர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் ஆகாஷ் சோப்ராவின் யூடியூப் சேனலுக்கு இந்திய அணியின் முன்னாள் ஆல்ரவுண்டரும் பேட்டிங் பயிற்சியாளருமான சஞ்சய் பாங்கர் பேட்டியளித்துள்ளார். அதில் மனம் திறந்து பல்வேறு விஷயங்களைப் பகிர்ந்துள்ளார்.
அதில் "இருவருமே சிறப்பான வீரர்கள். போட்டியின் நாளில் அது அவர்களுக்கான நாளாக அமைந்தால் இருவருமே சிறப்பாக விளையாடி இந்திய அணியை வெற்றி பெற வைப்பவர்கள். எனக்குத் தெரிந்தவரை இருவருக்கும் எவ்விதமான போட்டியும் இல்லை. அவர்கள் இருவரும் தங்களது பொறுப்புகளில் கவனமாகவும் சிறப்பாகவும் தெளிவுடனும் செயலாற்றி வருகிறார்கள்" என்றார்.
மேலும் தொடர்ந்த சஞ்சய் பாங்கர் "ரோகித் சர்மாவுக்குத் தொடக்க ஆட்டக்காரராகக் களமிறங்கும் வாய்ப்பு தாமதமாகவே கிடைத்தது. 2013க்கு பிறகே அவர் தொடக்க ஆட்டக்காரராகக் களமிறங்கினார். அதற்கு முன்பு வரை 5,6,7 ஆவது பேட்ஸ்மேனாகவே களம் கண்டார். தொடக்கத்தில் வெளிநாடு ஆடுகளத்தில் விளையாடுவதற்கு மிகவும் சிரமப்பட்டார். பந்தை யூகிப்பதில் தடுமாறினார். ஆனால் இப்போது மிகச் சிறந்த வீரராக உருவாகியிருக்கிறார்" என்றார் அவர்.