உலகக் கோப்பைத் தொடருக்கு அம்பத்தி ராயுடுவை தேர்வு செய்யாதது ஏன் என்பது பற்றி, இந்திய கிரிக்கெட் அணியின் தேர்வுக் குழு தலைவர் விளக்கம் அளித்துள்ளார்.
உலகக் கோப்பை தொடருக்கான அணியில் அம்பத்தி ராயுடு இடம்பெறுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவருக்குப் பதிலாக விஜய் சங்கர் சேர்க்கப்பட்டார். இதனால் ஆத்திரமடைந்த ராயுடு, கிண்டலாக ட்வீட் ஒன்றை வெளியிட்டார். பின்னர் மாற்று வீரர்கள் பட்டியலில் ராயுடு இடம்பெற்றிருந்தார். தவான், விஜய் சங்கர் ஆகியோர் காயம் காரணமாக, விலகிய போது மாற்று வீரர்களாக ரிஷாப் பன்ட், மயங்க் அகர்வால் இங்கிலாந்துக்கு அனுப்பப்பட்டனர். இதனால் வெறுப்பான ராயுடு, அனைத்து வகையிலான கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெற்றார்.
இந்நிலையில் வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான இந்திய அணியை தேர்வு செய்த பின், இந்திய தேர்வு குழுத் தலைவர் எம்.எஸ்.கே.பிரசாத் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, அம்பத்தி ராயுடு நீக்கப்பட்டது பற்றி கேள்வி கேட்கப்பட்டது.
அவர் கூறும்போது, ‘ராயுடு அப்போது வெளியிட்ட அந்த ட்வீட்-டை ரசித்தேன். அருமையான ட்வீட். ஆனால், பேட்டிங் வரிசை மற்றும் அணியின் கலவையின் அடிப்படையிலேயே ராயுடுவை தேர்வு செய்ய முடியாமல் போனது. அவருக்கு எதிராக ஒருதலைபட்சமாக நடந்து கொண்டோம் என்று சொல்வது சரியானதல்ல. அணியில் இடம் கிடைக் காததால், அவர் எந்த அளவுக்கு வருத்தமடைந்திருப்பார் என்பது தெரியும். முன்னாள் கிரிக்கெட் வீரர் என்ற முறையில் அதற்காக வருந்துகிறேன். தவான் காயத்தால் வெளியேறியதும் இடது கை பேட்ஸ்மேன் தேவை என்பதால் ரிஷாப் தேர்வு செய்யப்பட்டார்’’ என்றார்.