நிகிடி, ரெய்னா மிரட்டல்: பஞ்சாப்பை வென்றது சிஎஸ்கே

நிகிடி, ரெய்னா மிரட்டல்: பஞ்சாப்பை வென்றது சிஎஸ்கே
நிகிடி, ரெய்னா மிரட்டல்: பஞ்சாப்பை வென்றது சிஎஸ்கே
Published on

ஐபிஎல் தொடரின் கடைசி லீக் போட்டியில், லுங்கி நிகிடியின் சிறப்பான பந்துவீச்சு, சுரேஷ் ரெய்னா பொறுப்பான ஆட்டத்தால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, பஞ்சாப் அணியை வென்றது. 

ஐபிஎல் தொடரின் கடைசி லீக் போட்டி புனேவில் நேற்று நடந்தது. இதில், புள்ளிப்பட்டியலில் இரண்டாவது இடத்தில் இருக்கும் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் ஏழாவது இடத்தில் இருக்கும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியும் மோதின. சென்னை அணியில் வாட்சனுக்கு ஓய்வளிக்கப்பட்டு டுபிளிசிஸ் சேர்க்கப்பட்டார். பஞ்சாப் அணியில் ஸ்டோயினிஸ், யுவராஜ் சிங்குக்குப் பதிலாக டேவிட் மில்லர், கருண் நாயர் சேர்க்கப்பட்டனர்.

டாஸ் வென்ற சென்னை கேப்டன் தோனி, முதலில் பந்துவீச தீர்மானித்தார். அதன்படி பஞ்சாப் அணியின் தொடக்க ஆட்டக்காரரக்ள் கே.எல்.ராகுலும் கிறிஸ் கெயிலும் களமிறங்கினர். சென்னை அணியின் பந்துவீச்சு நேற்று சிறப்பாக இருந்தது. கிறிஸ் கெய்ல் நிகிடியில் பந்தில் டக் அவுட் ஆகி வெளியேறினார். மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் ராகுல் 7 ரன்னில் நிகிடி பந்திலேயே போல்டானார். அடுத்து வந்த ஆரோன் பின்ச் 4 ரன்கள் எடுத்த நிலையில் தீபக் சாஹர் பந்தில் ரெய்னாவிடம் கேட்ச் கொடுத்து வெளியேற, பஞ்சாப் அணி 16 ரன்னில் 3 விக்கெட்டை இழந்து தடுமாறியது.

பின்னர் வந்த மனோஜ் திவாரியும் மில்லரும் பொறுப்புடன் ஆடினர். திவாரி 35 ரன்களும் மில்லர் 24 ரன்களும் எடுத்து வெளியேறியதும் கருண் நாயர் அதிரடியாக ஆடினார். இதனால் அந்த அணியின் ஸ்கோர் உயர்ந்தது. அவர் 26 பந்தில் 54 ரன்கள் எடுத்து வெளியேறியதும் மற்றவர்கள் சொற்ப ரன்களில் நடையை கட்டினர். இதனால் அந்த அணி, 19.4 ஓவர்களில் 153 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.

சென்னை சூப்பர் கிங்ஸ் தரப்பில் நிகிடி மிரட்டினார். அவர் 4 ஓவர்கள் வீசி, வெறும் 10 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டை வீழ்த்தினார். ஷர்துல் தாகூர், பிராவோ, தலா இரண்டு விக்கெட்டுகளை வீத்தினர்.

பின்னர் 154 ரன்கள் இலக்கை நோக்கி ஆடியது சென்னை அணி. சென்னையை 100 ரன்களுக்குள் சுருட்டினால், ரன் ரேட் அடிப்படையில் ராஜஸ்தானை பின்னுக்குத் தள்ளிவிட்டு பிளே ஆப் வாய்ப்பை பெறலாம் என்ற கனவுடன் பஞ்சாப் ஆடியது. அதற்கு ஏற்ப அவர்களின் பந்துவீச்சும் அதிரடியாக அமைந்தது. 

சிஎஸ்கே-வின் தூண், அம்பத்தி ராயுடுவை ஒரு ரன்னிலும் டுபிளிசிஸை 14 ரன்களிலும் சாம் பில்லிங்ஸை டக் ஆவுட் ஆக்கியும் அதிர்ச்சி கொடுத்தது, பஞ்சாப் பந்துவீச்சு. ஆனால், ’சின்ன தல’ சுரேஷ் ரெய்னா பொறுப்புடன் ஆடினார். அவர் ஒரு பக்கம் விளாச, தோனிக்கு முன் களமிறங்கிய ஹர்பஜன் 19 ரன்களும் தீபக் சாஹர் 20 பந்துகளில் மூன்று சிக்சர், ஒரு பவுண்டரியுடன் 39 ரன்களும் எடுத்தனர். இதனால் அணி வெற்றியை நோக்கி சென்றது. இறுதியில் கேப்டன் தோனி, சிக்சர் அடித்து போட்டியை வெற்றிகரமாக முடித்து வைத்தார். சென்னை அணி, 19.1 ஓவரில் 159 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. தோனி 7 பந்தில் 16 ரன்களுடனும் சுரேஷ் ரெய்னா 48 பந்தில் 61 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.
ஆட்ட நாயகன் விருது லுங்கி நிகிடிக்கு வழங்கப்பட்டது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com