'ஆமாம் எல்லாம் ஆக்டிங் தான்' சரண்டரான நெய்மர்
ரஷ்யாவில் அண்மையில் 21 ஆவது பிஃபா உலகக் கோப்பை கால்பந்தாட்டப் போட்டிகளை நடந்து முடிந்தது. இதில், பிரான்ஸ் அணி சாம்பியன் பட்டம் வென்றது. மேலும் ஜாம்பவான் அணிகளான பிரேசில். அர்ஜென்டினா, ஸ்பெயின் ஆகியவை போட்டி தொடரில் இருந்து வெகு சீக்கிரமாகவே வெளியேறின. இதில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட பிரேசில் அணி பல்வேறு விமர்சனங்களை கண்டது. இதில் மிக முக்கியமாக அந்த அணியின் நட்சத்திர வீரர் நெய்மர் ஜூனியர் மீது கடுமையான விமர்சனம் முன்வைக்கப்பட்டது.
மெக்சிகோ அணியுடனான போட்டியின் போது அந்த அணியின் மாற்று வீரர் மிக்கல் லாயுன், நெய்மர் இடையே பந்தை விரட்டி சென்ற போது மோதல் ஏற்பட்டது. இதில் கீழே நெய்மர் விழுந்தார். விழுந்து உருண்டு ஓடினார். வலியில் துடித்தார். அப்பொழுது அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. அதனால் சுமார் 4 நிமிடங்கள் ஆட்டம் பாதிக்கப்பட்டது.
மெக்சிகோ பயிற்சியாளர் ஒசாரியோ பேசுகையில், “இது கால்பந்தாட்டத்திற்கு வெட்கட்கேடானது. ஒரே ஒரு விளையாட்டு வீரரால் நாம் நிறைய நேரத்தை இழந்துவிட்டோம். இதுபோன்ற செயலை நாம் அடிக்கடி தடுத்து நிறுத்தினோம். கால்பந்தாட்ட உலகிற்கு இதுமிகவும் மோசமான எடுத்துக் காட்டாகும். கால்பந்தாட்டத்தை பின்பற்றும் எல்லா குழந்தைகளுக்கும் கூட. இதுஒரு வலிமையான விளையாடு. ஒரு மனிதனின் விளையாட்டு. இதுபோன்ற நடவடிக்கைகள் இருக்கக் கூடாது என்றே நான் நினைக்கிறேன்” என்று சாடினார்.
இதனையடுத்து உலகெங்கிலும் உள்ள கால்பந்து ரசிகர்கள் முதல் உள்ளூர் கால்பந்து ரசிகர்கள் வரை அனைவரும் நெய்மரை வறுத்தெடுத்து வருகின்றனர். உலக ரசிகர்கள் நெய்மருக்கு ஆஸ்கார் விருதே கொடுக்கலாம் என்றும், நம் தமிழ் ரசிகர்கள் நெய்மரை நடிகர் திலகம் சிவாஜியுடன் ஒப்பிட்டு கலாய்த்து மீம்ஸ்கள் வெளியிட்டனர்.
இந்நிலையில் பிரேஸில் தொலைக்காட்சி விளம்பரத்துக்காக படப்பிடிப்பில் இருந்தார் அப்போது செய்தியாளர்களிடம் பேசிய நெய்மர் " ஆம் நான் மைதானத்தில் அதீதமாக காயம் அடைந்ததது போல நடித்தேன். தோல்வியின் விரக்தியில் இருந்ததால் அவ்வாறு மிகையாக நடந்துக்கொண்டேன்" என தெரிவித்துள்ளார். மேலும் விரைவில் நான் மிகச் சிறப்பாக விளையாடி பிரேசிலுக்கு பெருமை சேர்ப்பேன் என தெரிவித்துள்ளார்.