ஒருநாள் தொடர் : இந்தியாவை ஒயிட் வாஷ் செய்த நியூசிலாந்து

ஒருநாள் தொடர் : இந்தியாவை ஒயிட் வாஷ் செய்த நியூசிலாந்து
ஒருநாள் தொடர் : இந்தியாவை ஒயிட் வாஷ் செய்த நியூசிலாந்து
Published on

இந்தியாவிற்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியிலும் நியூசிலாந்து அணி வெற்றி பெற்றது.

இந்தியா - நியூசிலாந்து இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி இன்று நியூசிலாந்து நாட்டில் உள்ள பே ஓவல் மைதானத்தில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனால் முதலில் பேட்டிங்கை தொடங்கிய இந்திய அணியின், தொடக்க ஆட்டக்காரர் மயங்க் அகர்வால் 1 (3) ரன்னில் விக்கெட்டை இழந்தார். அவருடன் களமிறங்கிய பிருத்வி ஷா நிலைத்து ஆட, அடுத்ததாக வந்த கேப்டன் கோலி 9 (12) ரன்களில் ஆட்டமிழந்தார்.

இதைத்தொடர்ந்து பிருத்வி ஷா 40 (42) ரன்களில் ரன் அவுட் ஆக, பின்னர் ஜோடி சேர்ந்த ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் கே.எல்.ராகுல் அணியின் ஸ்கோரை உயர்த்தினர். அரை சதம் அடித்த ஸ்ரேயாஸ் 62 (63) ரன்களில் ஆட்டமிழக்க, நிலைத்து ஆடிய ராகுல் சதம் அடித்து அசத்தினார். இதையடுத்து கே.எல்.ராகுல் 112 (113) ரன்களும், பின்னர் வந்த மணிஷ் பாண்டே 42 (48) ரன்களும் எடுத்த நிலையில் விக்கெட்டை பறிகொடுத்தனர். 50 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 296 ரன்கள் குவித்தது. நியூசிலாந்து அணியில் வேகப்பந்து வீச்சாளர் ஹமிஷ் பென்னெட் 4 விக்கெட்டுகளை சாய்த்தார்.

இதையடுத்து களமிறங்கிய நியூசிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான மார்டின் குப்தில் மற்றும் ஹென்றி நிகோல்ஸ் இருவரும் விக்கெட்டை பறிகொடுக்காமல் பேட்டிங் செய்தனர். 66 (46) ரன்கள் எடுத்த நிலையில் குப்தில் அவுட் ஆக, 80 (103) ரன்களில் நிகோல்ஸ் வெளியேறினார். பின்னர் வந்த வீரர்கள் நிலைத்து விளையாடாத போதிலும், இறுதியாகக் களமிறங்கிய ஆல்ரவுண்டர் கோலின் டி கிராண்ட்ஹோம் அதிரடியாக விளையாடி 28 பந்துகளில் 58 ரன்கள் விளாசினார். இதனால் 47.1 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 300 ரன்கள் அடித்த நியூசிலாந்து அணி வெற்றி வாகை சூடியது. இந்திய அணியில் சுழற்பந்து வீச்சாளர் யஷ்வேந்திர சாஹல் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com