இந்தியா - நியூசிலாந்து முதல் டெஸ்ட் : வெற்றி வாய்ப்பு யாருக்கு ?

இந்தியா - நியூசிலாந்து முதல் டெஸ்ட் : வெற்றி வாய்ப்பு யாருக்கு ?
இந்தியா - நியூசிலாந்து முதல் டெஸ்ட் : வெற்றி வாய்ப்பு யாருக்கு ?
Published on

இந்தியா - நியூசிலாந்து அணிகள் இடையேயான முதல் டெஸ்ட் போட்டி இந்திய நேரப்படி நாளை அதிகாலை நடைபெறவுள்ளது.

இந்திய கிரிக்கெட் அணி நியூசிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ள நிலையில், டி20 மற்றும் ஒருநாள் தொடர்களை தொடர்ந்து 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நாளை தொடங்குகிறது. 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் நியூசிலாந்து அணியை இந்தியா ஒயிட் வாஷ் செய்தது. இதற்குப் பழி தீர்க்கும் வகையில் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இந்தியாவை நியூசிலாந்து அணி ஒயிட் வாஷ் செய்தது. இதனால் டெஸ்ட் தொடரில் இரு அணிகளும் தோற்றுவிடக்கூடாது என வெறித்தனமான ஆட்டத்தை வெளிப்படுத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

போட்டி நியூசிலாந்து மண்ணில் நடைபெறுவது அவர்களுக்கு கூடுதல் பலமாக அமையும். அதேசமயம் சர்வதேச அளவிலான டெஸ்ட் தரவரிசையில் முதலிடத்தில் இருக்கும் இந்தியாவை வெல்வது நியூசிலாந்துக்கு பெரும் சவால்தான். ஒருநாள் போட்டியில் களம் வேறு, ஆனால் டெஸ்ட் போட்டியின் களம் வேறு. டெஸ்ட் தொடரில் இந்தியாவின் பேட்டிங், பவுலிங் இரண்டுமே எப்படிப்பட்ட அணியையும் புரட்டிப்போடும் அளவிற்கு அண்மைக் காலமாக இருந்து வருகின்றது. இதனால் நியூசிலாந்து இந்தியாவிடம் தடுமாறிப்போகும் என்பதில் அய்யமில்லை என்கின்றனர் கிரிக்கெட் வல்லுநர்கள்.

அத்துடன் நியூசிலாந்து அணிக்கு எதிராக நடந்து முடிந்த டெஸ்ட் பயிற்சி ஆட்டத்தில் இந்தியாவே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியிருந்தது. அந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 263 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்திருந்தாலும், நியூசிலாந்து அணியை 235 ரன்களுக்கெல்லாம் சுருட்டிவிட்டது. பின்னர் இரண்டாவது இன்னிங்ஸ் பேட்டிங் செய்த இந்திய 252 ரன்கள் குவித்து 4 விக்கெட்டுகளை மட்டுமே இழந்திருந்தது. அதற்குள் 3 நாட்கள் முடிந்து போட்டி சமன் ஆகிவிட்டது. இந்தப் போட்டியில் இந்திய அணியில் ஹனுமா விஹாரி சதம் அடித்தார். புஜரா 93 (211), மயங்க் 81 (99) மற்றும் ரிஷாப் பண்ட் 70 (65) ரன்கள் குவித்தனர். பவுலிங்கில் முகமத் ஷமி 3 விக்கெட்டுகளையும், பும்ரா, உமேஷ் யாதவ் மற்றும் சைனி தலா இரண்டு விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். நியூசிலாந்து அணியில் ஸ்காட் குக்கிலிஜின் மற்றும் இஷ் சோதி தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

இந்நிலையில் நாளை நடைபெறவுள்ள போட்டியில் இந்திய அணி முதல் பேட்டிங் செய்தாலும், இரண்டாவது பேட்டிங் செய்தாலும் நியூசிலாந்து அணியின் பந்துவீச்சை சிதறடிக்கலாம் எனப்படுகிறது. இந்திய அணியில் கோலி, புஜரா, விஹாரி, பண்ட் ஆகியோர் சிறப்பாக விளையாடலாம். அதேசமயம் இந்திய அணியில் ரோகித் ஷர்மா மற்றும் ஷிகர் தவான் ஆகியோர் இல்லாததால் இளம் வீரர்களான பிருத்வி ஷா மற்றும் மயங்க் அகர்வால் இருவருக்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. அவர்களும் தங்கள் இடத்தை பதிவு செய்துகொள்ள முயன்ற வரை சிறப்பாக விளையாடுவார்கள்.

பவுலிங்கை பொறுத்தவரையில் ரவிச்சந்திரன் அஸ்வின், இஷாந்த் ஷர்மா ஆகியோர் நியூசிலாந்து அணிக்கு நெருக்கடி கொடுப்பார்கள். இருப்பினும் ராஸ் டைலர், வில்லியம்சன் ஆகியோர் சொந்த மண்ணில் சிறப்பாக விளையாடலாம். இருப்பினும் டெஸ்ட் போட்டியில் ஃபுல் ஃபார்மில் இருக்கும் இந்தியாவிடம் வெற்றியை பறிப்பது நியூசிலாந்து அணிக்கு சிம்ம சொப்பனம் தான்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com