இங்கிலாந்து பந்துவீச்சை அபாரமாக எதிர்கொண்ட கேன் வில்லியம்சன் 132 ரன்களை விளாசினார்.
இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து கிரிக்கெட் அணிகள் மோதும் 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி வெலிங்டனில் நடந்து வருகிறது. முதல் இன்னிங்சில் இங்கிலாந்து 8 விக்கெட்டுக்கு 435 ரன் குவித்து 'டிக்ளர்' செய்தது. பின்னர் விளையாடிய நியூசிலாந்து 209 ரன்னுக்கு அனைத்து விக்கெட்டையும் இழந்து பாலோ-ஆன் ஆனது. இதனால் 226 ரன்கள் பின்தங்கிய நிலையில் தொடர்ந்து 2-வது இன்னிங்சை நியூசிலாந்து விளையாடியது. இதில் அந்த அணியின் தொடக்கம் சிறப்பாக இருந்தது. நேற்றைய 3-ம் நாள் ஆட்ட நேர முடிவில் நியூசிலாந்து 3 விக்கெட்டுக்கு 202 ரன்கள் எடுத்து இருந்தது. கேன் வில்லியம்சன் 25 ரன்னுடனும், நிகோல்ஸ் 18 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.
இன்று 4-வது நாள் ஆட்டம் நடந்தது. நிகோல்ஸ் 30 ரன்னில் அவுட் ஆனார். வில்லியம்சன் நிலைத்து நின்று விளையாடினார். மிட்செல் 54 ரன் எடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து களம் வந்த ப்ளுன்டெல், வில்லியம்சனுக்கு உறு துணையாக விளையாடினார். இருவரின் ஆட்டத்தால் நியூசிலாந்து முன்னிலை பெற்றது. வில்லியம்சன் தனது 26-வது சதத்தை (92 டெஸ்ட்) பூர்த்தி செய்தார். அவர் 132 ரன் எடுத்து (282 பந்து, 12 பவுண்டரி) அவுட் ஆனார். அடுத்து களம் வந்த பிரேஸ்வெல் 8 ரன்னில் ரன் அவுட் ஆனார். நியூசிலாந்து 162.3 ஓவரில் 483 ரன்கள் குவித்து ஆல் அவுட் ஆனது. டாம் ப்ளுன்டெல் 90 ரன் எடுத்து கடைசி விக்கெட்டாக அவுட் ஆனார். இங்கிலாந்து தரப்பில் ஜாக் லீச் 5 விக்கெட் கைப்பற்றினார்.
இதன் மூலம் இங்கிலாந்துக்கு 258 ரன்களை வெற்றி இலக்காக நியூசிலாந்து அணி நிர்ணயித்துள்ளது. இதையடுத்து அந்த அணி 2-வது இன்னிங்சை இங்கிலாந்து அணி ஆடிவருகிறது. நான்காம் நாள் முடிவில் 11 ஓவர்களுக்கு 48-1 என்கிற நிலையில் இங்கிலாந்து விளையாடி வருகிறது. இங்கிலாந்து அணியின் வெற்றிக்கு இன்னும் 210 ரன்கள் தேவையாக உள்ளது. இன்னும் 9 விக்கெட்டுகள் அந்த அணியின் கைவசம் உள்ளது. நாளை ஆடுகளத்தின் தன்மையை பொறுத்தும் அதனை அணிகள் எப்படி பயன்படுத்திக் கொள்ளப் போகிறது என்பதை பொறுத்தும் வெற்றி தோல்வி அமையும்.