'ஸ்பிலிட்' கேப்டன்சிக்கு மாறிய நியூசிலாந்து! கேப்டன் பதவியிலிருந்து வில்லியம்சன் விலகல்!

'ஸ்பிலிட்' கேப்டன்சிக்கு மாறிய நியூசிலாந்து! கேப்டன் பதவியிலிருந்து வில்லியம்சன் விலகல்!
'ஸ்பிலிட்' கேப்டன்சிக்கு மாறிய நியூசிலாந்து! கேப்டன் பதவியிலிருந்து வில்லியம்சன் விலகல்!
Published on

நியூசிலாந்து டெஸ்ட் கேப்டன் பதவியில் இருந்து கேன் வில்லியம்சன் விலகியுள்ளார். புதிய டெஸ்ட் கேப்டனை நியமித்துள்ளது நியூசிலாந்து அணி.

சிகப்பு நிற பந்தாட்டம் எனப்படும் கிரிக்கெட் சிறந்த வடிவமாக பார்க்கப்படும் டெஸ்ட் போட்டிகளுக்கு, ஒரு உலகக்கோப்பை தொடர் வைக்கப்படவேண்டும் என்ற குரல் காலங்காலமாக வைக்கப்பட்டு, 2020ஆம் ஆண்டிற்கு பிறகு அது ஐசிசி தரப்பால் அனைவரது அமோக வரவேற்பின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது. 2021 டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர் வெகுசிறப்பாகவே அமைந்தது. இறுதிப்போட்டியில் முன்னேறிய இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் சமபலத்துடனே விளையாடினர். 2021 டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் இந்திய அணியை வீழ்த்தி நியூசிலாந்து அணி கோப்பையை கைப்பற்றியது.

டெஸ்ட், ஒடிஐ, டி20 என அனைத்து வடிவங்களும் முக்கியமானதாக பார்க்கப்படும் இந்த சூழ்நிலையில், அனைத்து அணிகளும் கோப்பை கனவுகளுக்காக ஸ்பிலிட் கேப்டன்ஸி முறையை அறிமுகப்படுத்தி வருகின்றன. அந்த வகையில் நியூசிலாந்து அணியும் அதை கையில் எடுத்துள்ளது.

2016-ல் பிரெண்டன் மெக்கல்லம் பதவிக்கு பிறகு பொறுப்பேற்ற வில்லியம்சன், நியூசிலாந்தை 6 வருடங்களில் 40 டெஸ்ட்களில் வழிநடத்தினார். அதில் 22 வெற்றிகள், 10 தோல்வி மற்றும் 8 ஆட்டங்களில் டிரா என, அவர் கேப்டனாக 57 சராசரியுடன் 11 சதங்களையும் அடித்துள்ளார். மேலும் அவரது கேப்டன்சியின் முக்கிய பகுதியாக 2021ல் நியூசிலாந்து அணிக்கு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையை கைப்பற்றி தந்துள்ளார்.

பதவி விலகல் குறித்து பேசியிருக்கும் வில்லியம்சன், "டெஸ்ட் கிரிக்கெட்டில் பிளாக்கேப்ஸ் கேப்டனாக இருந்தது நம்பமுடியாத சிறப்பிற்குரிய மரியாதையாகும். என்னைப் பொறுத்தவரை, டெஸ்ட் கிரிக்கெட் என்பது விளையாட்டின் உச்சம் மற்றும் அந்த வடிவமைப்பில் அணியை வழிநடத்தும் சவால்களை நான் அனுபவித்தேன். கேப்டனானது அதிக பணிச்சுமையுடன் களத்திற்கு வெளியேயும் வருகிறது. எனது வாழ்க்கையின் இந்த கட்டத்தில் இந்த முடிவுக்கான நேரம் சரியானது என நான் உணர்கிறேன்” என்று கூறினார்.

மேலும், "டிம் செளத்தி கேப்டனாகவும், டாம் லாதம் துணை கேப்டனாகவும் ஆதரிப்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். எனது வாழ்க்கையின் பெரும்பகுதியில் இருவருடனேயும் விளையாடியதால், அவர்கள் ஒரு சிறப்பாக செயல்படுவார்கள் என்று நான் நம்புகிறேன். பிளாக்கேப்ஸிற்காக விளையாடுவது மற்றும் மூன்று வடிவங்களிலும் பங்களிப்பது எனது முதல் முன்னுரிமையாகும் என்று தெரிவித்தார்.

22 டி20 மற்றும் 1 ஒருநாள் போட்டிகளுக்கு கேப்டனாக இருந்த டிம் சவுதி கூறுகையில், "டெஸ்ட் கேப்டனாக நியமிக்கப்பட்டது மிகப்பெரிய கவுரவம். நான் டெஸ்ட் கிரிக்கெட்டை விரும்புகிறேன், இது இறுதி சவால், இதற்காக நான் மிகவும் உற்சாகமாக இருக்கிறேன். இந்த வடிவத்தில் அணியை வழிநடத்துவதில், கேன் ஒரு சிறந்த டெஸ்ட் கேப்டனாக இருந்தார். மேலும் அதை போன்றே நாங்கள் மீண்டும் எவ்வாறு உருவாக்க முடியும் என்பதில் பயிற்சியாளர் கேரியுடன் இணைந்து பணியாற்ற ஆவலுடன் காத்திருக்கிறேன்" என்று கூறினார்.

நியூசிலாந்து பயிற்சியாளர் கேரி ஸ்டெட் வில்லியம்சனின் தலைமையைப் பாராட்டி பேசுகையில், "கேன் டெஸ்ட் அணியை மகத்தான வெற்றிகரமான காலகட்டத்தின் மூலம் வழிநடத்தினார், இது வீரர்களை ஒன்றிணைத்து பொதுவான ஒரு இலக்கை நோக்கி செயல்படுவதில் அவரது திறன் தனித்துவமானது. அவர் நிச்சயமாக தனது சொந்த ஆட்டத்திறன் மூலம் முன்னணியில் இருந்து அணியை வழிநடத்தியவர், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பை வெல்வதற்கான எங்கள் உந்துதலின் போது அவருடைய பங்கு மிகவும் அதிகமாகவே இருந்தது. அவரது பணிச்சுமையை குறைப்பதன் மூலம் சர்வதேச அரங்கில் கேன் வில்லியம்சனின் சிறந்த ஆட்டத்தை நாம் தொடர்ந்து பார்க்கலாம். , மேலும் அவர் இந்தக் குழுவில் ஒரு முக்கிய தலைவராக இருப்பார்” என்று தெரிவித்தார்.

மேலும் டிம் செளத்தி பற்றி பேசுகையில், "டிம் ஒரு நல்ல கிரிக்கெட் மூளையுடன் செயல்படக்கூடிய ஒரு தரமான தலைவர்,"டி20 அணியுடன் அவரது கேப்டன்ஷிப் திறமைகளை நாங்கள் பார்த்தோம், மேலும் அவர் தொடர்ந்து ஆக்ரோஷமான பாணியைக் கொண்டு வருவார் என்று நான் நம்புகிறேன். மேலும் ஒரு பந்து வீச்சாளராக இருப்பதில் சற்று வித்தியாசமான கண்ணோட்டத்தில், புதிய யோசனைகளையும் புதிய சிந்தனையையும் அவர் கொண்டு வருவார் என்று நான் நம்புகிறேன்" என்று தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com