நியூசிலாந்துக்கு எதிராக நடைபெற்று வரும் முதல் டி20 போட்டியில் இந்தியா வெற்றி பெற, நியூசிலாந்து 204 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.
நியூசிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 5 இருபது ஓவர் போட்டிகள், மூன்று ஒரு நாள் போட்டிகள் மற்றும் இரண்டு டெஸ்ட்
போட்டிகளில் விளையாடவுள்ளது. இரு அணிகள் இடையிலான முதல் இருபது ஓவர் போட்டி இந்திய நேரப்படி மதியம் 12.20 மணிக்கு தொடங்கியது.
ஆக்லாந்து ஈடன் மைதானத்தில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியில் டாஸ் வென்ற கேப்டன் கோலி முதலில் பவுலிங் செய்ய தீர்மானித்தார்.
இதனையடுத்து நியூசிலாந்தி அணி முதலில் பேட்டிங் செய்தது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக மார்டின் குப்தில்லும் மன்ரோவும் களமிறங்கினர். இருவரும் இந்திய பந்து வீச்சாளர்களின் பந்துகளை நாலாபுறமும் சிதறடித்தனர். மன்ரோ 42 பந்துகளில் 59 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். மார்டின் குப்தில் 19 பந்துகளில் 30 ரன்கள் எடுத்திருந்தபோது ஷிவம் துபே பந்துவீச்சில் ஆட்டமிழந்து வெளியேறினார்.
இதனையடுத்து களமிறங்கிய கிராண்ட் ஹோம் டக் அவுட்டாகி வெளியேறினார். ஆனால், இதற்கு பின்பும் நியூசிலாந்து வீரர்கள் அதிரடி காட்டினர். நியூசிலாந்து கேப்டன் வில்லியம்சன் 26 பந்துகளில் 51 ரன்கள் எடுத்து சாஹல் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். ஆனால் தொடர்ந்து அதிரடியாக விளையாடிய ராஸ் டெய்லர் 27 பந்துகளில் 54 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இறுதியில் நியூசிலாந்து அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 203 ரன்கள் குவித்தது.