ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரை தங்கள் நாட்டில் நடத்துமாறு பிசிசிஐ நிர்வாகத்தை நியூசிலாந்து கேட்டுக்கொண்டதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்ததையடுத்து மார்ச் 29-ஆம் தேதி நடைபெறவிருந்த ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடர் போட்டிகள் ஏப்ரல் 15-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டன. பின்பு, இந்தியாவில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்ட காரணத்தால் திட்டமிட்டபடி ஐபிஎல் போட்டிகள் நடைபெறவில்லை. மேலும் ஐபிஎல் போட்டிகள் செப்டம்பரில் நடத்தப்படலாம், வெளிநாடுகளில் நடக்கலாம் என்ற செய்திகள் வெளியாகின.
இதனையடுத்து அதிகாரப்பூர்வமாகச் செய்தி வெளியிட்ட பிசிசிஐ "நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பதாலும், ஊரடங்கு உத்தரவு அரசால் செயல்படுத்தப்பட்டு வருவதாலும், அடுத்த அறிவிப்பு வரும் வரை 2020 ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் போட்டிகள் ஒத்திவைக்கப்படுகின்றன. கிரிக்கெட் போட்டியை விடத் தேசத்தின் பாதுகாப்பும் நலனே முக்கியம் என்பதால் பிசிசிஐ மற்றும் ஐபிஎல் அணிகளின் நிர்வாகத்தினர் இத்தகைய முடிவை எடுத்துள்ளோம்" எனத் தெரிவித்தது.
இதனையடுத்து ஐபிஎல் போட்டியை தங்கள் நாட்டில் நடத்தலாம் என்று இலங்கை கிரிக்கெட் வாரியமும் ஐக்கிய அரபு அமீரகமும் பிசிசிஐ-க்கு கோரிக்கை விடுத்தன. இது குறித்து கடந்த மாதம் பேசிய பிசிசிஐ பொருளாளர் அருண் துமால் "ஐபிஎல் போட்டிகளை நடத்த ஐக்கிய அரபு அமீரகம் கோரிக்கை விடுத்துள்ளது. ஆனால் இப்போதுள்ள சூழ்நிலையில் சர்வதேச அளவில் எங்கும் பயணம் செய்ய முடியாது" என்றார். இந்நிலையில் இப்போது நியூசிலாந்தும் ஐபிஎல் போட்டிகளை நடத்த விரும்புவதாக செய்திகள் வெளியாகி இருக்கின்றன.
இது குறித்து பிசிசிஐ அதிகாரி ஒருவர் பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு கொடுத்தப் பேட்டியில் "முதலில் இந்தியாவில் ஐபிஎல் தொடரை நடத்த வேண்டும் என்பதே எங்களுடைய விருப்பம். ஆனால் இங்கு நடத்த முடியவில்லை என்றால் வெளிநாடுகளில் நடத்துவது குறித்து யோசனை செய்வோம். ஏற்கெனவே இலங்கை, ஐக்கிய அரபு அமீரகம் ஏன் நியூசிலாந்து கூட ஐபிஎல் தொடரை நடத்த விருப்பம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அனைவரிடமும் கலந்தாலோசிப்போம். முதலில் வீரர்களின் பாதுகாப்பும் நலனே முக்கியம், அதில் எந்தச் சமரசமும் இல்லை" என தெரிவித்துள்ளார்.