”இதற்கு முன் இதுபோன்ற ஷாட்களை நான் பார்த்ததேயில்லை” - சூர்யகுமாரை வியந்த வில்லியம்சன்!

”இதற்கு முன் இதுபோன்ற ஷாட்களை நான் பார்த்ததேயில்லை” - சூர்யகுமாரை வியந்த வில்லியம்சன்!
”இதற்கு முன் இதுபோன்ற ஷாட்களை நான் பார்த்ததேயில்லை” - சூர்யகுமாரை வியந்த வில்லியம்சன்!
Published on

சூர்யகுமார் யாதவின் பேட்டிங் குறித்து நியூசிலாந்து அணி கேப்டன் கேன் வில்லியம்சன் வியந்து பாராட்டியுள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணி மூன்று டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடுவதற்காக நியூசிலாந்து சென்றுள்ளது. இரு அணிகள் இடையே வெல்லிங்டனில் நேற்று முன்தினம் நடைபெற இருந்த முதல் டி20 போட்டி மழையால் ஒரு பந்து கூட வீசப்படாமல் ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில், 2-வது போட்டி மவுண்ட் மாங்கானுவில் இன்று நடந்தது.

டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பீல்டிங்கைத் தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 191 ரன்கள் குவித்தது. அதிரடியாக ஆடி சதம் விளாசிய சூர்யகுமார் யாதவ், 111 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். இஷான் கிஷன் 36 ரன்கள் சேர்த்தார். நியூசிலாந்து தரப்பில் டிம் சவுத்தி 3 விக்கெட் வீழ்த்தினார்.

இதையடுத்து 192 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய நியூசிலாந்து அணி 18.5 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 126 ரன்கள் மட்டுமே சேர்த்தது. இதன் மூலம் இந்திய அணி 65 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. நியூசிலாந்து அணி தரப்பில் கேப்டன் கேன் வில்லியம்சன் (61 ரன்கள்), டெவோன் கான்வே (25 ரன்கள்) தவிர்த்து மற்ற வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்னில் ஆட்டமிழந்து வெளியேறினர். இந்திய அணியில் அபாரமாக பந்துவீசிய தீபக் ஹூடா 4 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். முகமது சிராஜ், யுஸ்வேந்திர சாஹல் தலா 2 விக்கெட் கைப்பற்றினர். இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி 1-0 என தொடரில் முன்னிலை வகிக்கிறது.

இதனையடுத்து, தோல்விக்கு பின் நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன் கூறுகையில், “இது எங்களுடைய சிறப்பான முயற்சி கிடையாது. இதை நான் சொல்லியே ஆகணும். நான் பார்த்ததிலேயே மிகச் சிறந்த ஆட்டங்களுள் ஒன்று சூர்ய குமார் உடையது. அவரின் சில ஷாட்களை இதற்கு முன் நான் பார்த்ததே இல்லை. இது அடுத்த லெவல் ஆட்டம். இந்திய அணி மிகவும் சிறப்பாக ஆடியது. எங்களால் இலக்கை எட்ட முடியவில்லை. டி20 போட்டிகளில் சில நேரங்களில் இதுபோல் நடக்கும்” என்றார்.

ஆட்டநாயகன் விருதனை பெற்ற சூர்யகுமார் யாதவ், “பேட்டிங் செய்ய சென்ற போது என்னுடைய பிளானிங் தெளிவாக இருந்தது. கடைசி வரை களத்தில் நிற்க வேண்டும். இந்த களத்தில் பார் ஸ்கோரை எட்ட வேண்டும். மோசமான சூழலிலும் நல்ல ஊக்கத்துடன் விளையாட வேண்டும் என்பதே என்னுடைய சீக்ரெட். சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதில் மகிழ்ச்சி” என்றார்.

வெற்றிக்குக்கு பின்னர் கேப்டன் ஹர்திக் பாண்டியா பேசுகையில், “மிகவும் சிறப்பாக விளையாடினோம். குறிப்பாக சூர்யகுமார் யாதவ்க்கு இது சிறப்பான இன்னிங்ஸ். ஒருவர் மட்டுமே சிறப்பாக ஆடும் நிலை எல்லா நேரத்திலும் சரியாக அமைந்துவிடாது. இன்னும் சில பேட்ஸ்மேன்கள் கூடுதல் ரன்கள் சேர்க்க வேண்டும். வீரர்கள் புரபஷனலாக இருக்க வேண்டும் என்பதே என் எதிர்பார்ப்பு. மகிழ்ச்சியுடன் விளையாட சொன்னேன். எல்லா வீரர்களும் இந்த அணியில் எனக்கு ஏற்கனவே பரிட்சையமானவர்கள். ஒவ்வொருவரும் மற்றவர்களின் அபார ஆட்டத்தால் மகிழ்ச்சி அடைவார்கள். அடுத்தப் போட்டியில் எவ்வித மாற்றம் இருக்கும் என்பதை இப்போது கூற முடியாது. எல்லோருக்கும் வாய்ப்பு கொடுக்க வேண்டும்” என்றார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com