ஐபிஎல் முதலிய உள்நாட்டு கிரிக்கெட்டில் புதிய விதிமுறையை அறிமுகப்படுத்த திட்டமிட்டிருக்கும் பிசிசிஐ, சோதனை முறையாக சையத் முஸ்தாக் கோப்பை தொடரில் TACTICAL SUBSTITUTE முறையை அறிமுகப்படுத்த உள்ளது.
இக்கால கிரிக்கெட் ரசிகர்களின் எதிர்பார்ப்பை தூண்டும் வகையிலும், போட்டிகளின் சுவாரசியத்தை அதிகப்படுத்தும் நோக்கிலும் பல்வேறு அம்சங்கள் புதிது புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில், உள்நாட்டு 20 ஓவர் கிரிக்கெட் தொடரான சையத் முஸ்தாக் கோப்பை கிரிக்கெட் தொடரில் TACTICAL SUBSTITUTE முறை அறிமுகப்படுத்தப்படவுள்ளது. சையத் முஸ்தாக் கோப்பை தொடர் அடுத்த மாதம் 11ஆம் தேதி தொடங்க உள்ள நிலையில், TACTICAL SUBSTITUTE முறை இடம்பெறுவதை பிசிசிஐ உறுதிசெய்திருக்கிறது.
அதன்படி, ஒவ்வொரு அணியும், டாஸ் போடுவதற்கு முன் அணியில் விளையாடும் 11 வீரர்கள் 4 மாற்று வீரர்கள் அடங்கிய பட்டியலைக் கொடுக்க வேண்டும். அந்த மாற்று வீரர்களில் ஒருவரை, தேவைப்படும் பட்சத்தில் 14 ஓவர்களுக்கு உள்ளாக பேட்ஸ்மேனாகவோ, பந்துவீச்சாளராகவோ களமிறக்கி, அவரை முழுமையாகப் பயன்படுத்திக்கொள்ள இந்த விதி வழிவகை செய்கிறது. எனினும் ஆஸ்திரேலிய பிக்பாஷ் தொடரில் எக்ஸ் ஃபேக்டர் (X FACTOR) விதிமுறையில் இருந்து இது மாறுபட்டது என்பதும் விளக்கப்பட்டுள்ளது.
பந்து வீச்சாளராக இருக்கும் மாற்று வீரர் களமிறங்கி தமக்கான 4 ஓவர்களை முழுமையாக வீச இந்த விதி வழிவகை செய்கிறது. இதேபோல், பேட்ஸ்மேனாக இருக்கும் மாற்று வீரருக்கு பேட்டிங் செய்ய வாய்ப்பளிக்கும் வகையிலும் விதிகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த புதிய விதிகள், போட்டிகளின் சுவாரசியத்தை அதிகப்படுத்துமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.