உலகிலேயே பெரிய மைதானம்; ஜொலிக்கப்போகும் விளக்குகள்... மொடேரா ஸ்டேடியம் சில தகவல்கள்

உலகிலேயே பெரிய மைதானம்; ஜொலிக்கப்போகும் விளக்குகள்... மொடேரா ஸ்டேடியம் சில தகவல்கள்
உலகிலேயே பெரிய மைதானம்; ஜொலிக்கப்போகும் விளக்குகள்... மொடேரா ஸ்டேடியம் சில தகவல்கள்
Published on

இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 3 ஆவது டெஸ்ட் போட்டி நாளை குஜராத் மாநிலம் அகமதாபாதில் இருக்கும் சர்தார் வல்லபாய் படேல்
மைதானத்தில் நாளை பகலிரவுப் போட்டியாக தொடங்குகிறது.

உலகிலேயே மிகப்பெரிய கிரிக்கெட் மைதானமாக இது உருவாக்கப்பட்டுள்ளது. மொத்தம் 1,10,000 இருக்கைகள் இந்த மைதானத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்பாக ஆஸ்திரேலியாவின் மெல்பர்ன்தான் மைதானம்தான் உலகிலேயே மிகப்பெரிய மைதானமாக கொண்டாடப்பட்டது. இந்த மைதானம் 1982 இல் குஜராத் மாநிலம் அகமதாபாதின் சபர்மதி நதியின் கரையில் கட்டப்பட்டது. பின்னர் உலகிலேயே மிகப்பெரிய மைதானமாக அதை மாற்றுவதற்கு 2015-இல் முடிவு செய்யப்பட்டு, மறுசீரமைப்புப் பணிகள் 2020 பிப்ரவரியில் நிறைவடைந்தன.

முதலில் 49,000 பேர் அமரும் வகையில் இருந்த மைதானம், மறுசீரமைப்புப் பணிகளுக்குப் பிறகு 1,10,000 அதிகமானோர் அமரும் வகையில் கட்டப்பட்டுள்ளது. இதன்மூலம் 90,000 பேர் அமரும் வசதி கொண்ட மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தை முறியடித்து, உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானமாக உருவெடுத்துள்ளது. இதில், தலா 25 பேர் வசதியாக அமரக் கூடிய 76 கார்ப்பரேட் பாக்ஸ் கேலரிகளும் அடங்கும். இந்த மைதானம் சுமார் 63 ஏக்கர் அளவிலான நிலப்பரப்பில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மைதானத்துக்கு 4 நுழைவு வாயில்கள் உள்ளன.

உலகிலேயே வேறெந்த மைதானத்திலும் இல்லாத வகையில், சர்தார் படேல் மைதானத்தில் வீரர்களுக்காக 4 டிரெஸ்ஸிங் ரூம்கள் உள்ளன. அதில் ஒவ்வொன்றுக்குமாக தனித்தனியே உடற்பயிற்சிக் கூடம் உள்ளிட்ட வசதிகள் செய்து தரப்பட்டுள்ளன. பிரதான மைதானத்தில் ஆட்டத்துக்கு பயன்படுத்தும் வகையில் மொத்தம் 11 'சென்டர் பிச்' உள்ளன. மேலும் 'சென்டர் பிட்ச்'க்கு பயன்படுத்தப்படும் மண்ணே, பயிற்சி ஆடுகளங்களிலும் பயன்படுத்தப்படுகிறது. மேலும் பயிற்சிக்கென தனியே 2 மைதானங்கள் உள்ளன. அவற்றில் சிறிய பெவிலியனும் இருக்கிறது.

மேலும் பயிற்சிக்கென தனியே 9 ஆடுகளங்கள் உள்ளன. இதில் 6 ஆடுகளங்கள் உள்ளரங்கிலும், 3 ஆடுகளங்கள் வெளியிலும் அமைந்துள்ளன. உள்ளரங்கு ஆடுகளங்களில் பேட்டிங் பயிற்சிக்காக பந்துவீசும் 'ஆட்டோ' பவுலிங் எந்திரங்கள் உள்ளன. இதர மைதானங்களில் இல்லாத வகையில் மழை நீரை மைதானத்திலிருந்து விரைவாக வெளியேற்றும் வசதிகள் இந்த மைதானத்தில் செய்யப்பட்டுள்ளன. ஆட்டத்தின்போது 8 செ.மீ. அளவுக்கு மழைப்பொழிவு இருந்தாலும், நீரை விரைவாக வெளியேற்றி ஆட்டம் ரத்தாகாமல் மீண்டும் தொடங்க வகை செய்யப்பட்டுள்ளது.

மிக முக்கியமாக எல்இடி விளக்குகள் பிரம்மாண்ட Flood Light கம்பங்களுக்குப் பதிலாக, மைதானத்தின் மேற்கூரை விளிம்புகளில் வட்ட வடிவில் எல்இடி Flood light விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன. பகலிரவு இரவு ஆட்டங்களின்போது வீரர்களுக்கு பந்து தெளிவாக தெரிய உதவும். மேலும் இந்த விளக்குகளில் ஒளி மைதானத்தில் நிழல் விழாத வகையிலும் பொருத்தப்பட்டுள்ளன.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com