நியூசிலாந்துக்கு எதிரான 2 வது டெஸ்ட் போட்டியில் பங்களாதேஷ் அணி, முதல் இன்னிங்ஸில் 211 ரன்னுக்கு அனைத்து விக்கெட்டையும் இழந்தது.
பங்களாதேஷ் கிரிக்கெட் அணி, நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து கிரிக்கெட் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி, ஹாமில்டனில் நடந்தது. இதில் நியூசிலாந்து அணி வெற்றி பெற்றது. இரு அணிகளுக்கு இடையிலான 2 வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி வெலிங்டனில் நேற்று முன்தினம் தொடங்க இருந்தது. மழை காரணமாக, முதல் நாள் ஆட்டம் நடக் கவில்லை. 2 வது நாளிலும் மழை தொடர்ந்ததால் ஒரு பந்து கூட வீசப்படவில்லை. மூன்றாவது நாளான இன்று மழை இல்லாததால் போட்டித் தொடங்கியது.
முதலில் பேட் செய்த பங்களாதேஷ் அணி, 211 ரன் எடுத்தது. அந்த அணியில் அதிகப்பட்சமாக தொடக்க ஆட்டக்காரர் தமிம் இக்பால் 74 ரன் எடுத்தார். லிடன் தாஸ் 33 ரன் எடுத்தார். நியூசிலாந்து தரப்பில் நீல் வாக்னர் 4 விக்கெட்டும் டிரென்ட் போல்ட் 3 விக்கெட்டும் வீழ்த்தினார்.
பின்னர் களமிறங்கிய நியூசிலாந்து அணி, இன்றைய ஆட்ட நேர முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 38 ரன் எடுத்துள்ளது. கேப்டன் வில்லியம்சனும் (10) ராஸ் டெய்லரும் (19) ஆடி வருகின்றனர். இன்று ஒரே நாளில் 12 விக்கெட் விழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது. நான்காவது நாள் ஆட்டம் நாளை நடக்கிறது.