நீல் வாக்னர், போல்ட் வேகத்தில் சரிந்த பங்களாதேஷ்!
பங்களாதேஷூக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து அணி, இன்னிங்ஸ் மற்றும் 12 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.
பங்களாதேஷ் கிரிக்கெட் அணி, நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து கிரிக்கெட் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி, ஹாமில்டனில் நடந்தது. இதில் நியூசிலாந்து அணி வெற்றி பெற்றது. இரு அணிகளுக்கு இடையிலான 2 வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி வெலிங்டனில் நடக்கிறது. மழை காரணமாக, முதல் நாள் ஆட்டம் நடக்கவில்லை. 2 வது நாளிலும் மழை தொடர்ந்ததால் ஒரு பந்து கூட வீசப்படவில்லை. மூன்றாவது நாள் மழை இல்லாததால் போட்டித் தொடங்கியது.
முதலில் பேட் செய்த பங்களாதேஷ் அணி, முதல் இன்னிங்ஸில் 211 ரன் எடுத்தது. அந்த அணியில் அதிகப்பட்சமாக, தொடக்க ஆட்டக்காரர் தமிம் இக்பால் 74 ரன் எடுத்தார். லிடன் தாஸ் 33 ரன் எடுத்தார். நியூசிலாந்து தரப்பில் நீல் வாக்னர் 4 விக்கெட்டும் டிரென்ட் போல்ட் 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.
பின்னர் களமிறங்கிய நியூசிலாந்து அணி, நிதானமாக ஆடியது. அந்த அணியின் கேப்டன் வில்லியம்சன் 74 ரன் எடுத்து ஆட்டமிழந்தார். ராஸ் டெய்லர் இரட்டை சதம் அடித்தார். அவருடன் சிறப்பாக ஆடிய நிக்கோலஸ் 107 ரன் விளாசினார். இதையடுத்து அந்த அணி 6 விக்கெட் இழப்புக்கு 432 ரன் எடுத்து டிக்ளேர் செய்தது.
பின்னர் தனது இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய பங்களாதேஷ் அணி, நேற்றைய ஆட்ட நேர முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 80 ரன் எடுத்துள்ளது. முகமது மிதுன் 25 ரன்னுடனும் சவும்யா சர்கார் 12 ரன்னுடனும் களத்தில் இருந்தனர். கடைசி நாள் ஆட்டம் இன்று நடந்தது.
வாக்னர் மற்றும் டிரென்ட் போல்ட்டின் சிறப்பான பந்துவீச்சுக்கு முன் பங்களாதேஷ் வீரர்களால் தாக்குபிடிக்க முடியவில்லை. இதனால் 209 ரன்னுக்கு அந்த அணி அனைத்து விக்கெட்டையும் இழந்தது. இதன் மூலம் இன்னிங்ஸ் மற்றும் 12 ரன் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணி வெற்றி பெற்றது. அதிகப்பட்சமாக மிதுன் 47 ரன்னும் மகமத்துல்லா 67 ரன்னும் எடுத்தனர். நியூசிலாந்து அணி தரப்பில் நீல் வாக்னர் 5 விக்கெட்டையும் போல்ட் 4 விக்கெட்டையும் சாய்த்தனர். ஹென்றி ஒரு விக்கெட்டை வீழ்த்தினர்.
இந்த வெற்றியை அடுத்து மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 2-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது நியூசிலாந்து அணி. இரு அணிகளுக்கு இடையிலான 3 வது டெஸ்ட் போட்டி, கிறிஸ்ட்சர்ச்சில் வரும் சனிக்கிழமை நடக்கிறது.