ஆசிய விளையாட்டு போட்டிகளில் குதியேற்றத்தில் தங்கத்தை வென்று மூன்றாவது தங்கத்தை தட்டிச்சென்றுள்ளது இந்தியா.
துப்பாக்கிச் சுடுதல், கிரிக்கெட் முதலிய இரண்டு பிரிவுகளில் தங்கம் வென்ற நிலையில், குதிரையேற்றத்தில் பங்கேற்ற இந்தியாவின் அனுஷ் அகர்வால், திவ்யக்ரீத்தி சிங், பிபுல் சேடா அடங்கிய குழு தங்கம் வென்று அசத்தியுள்ளது. இது இந்தியா பெறும் 3-வது தங்கமாகும்.
இதே போல் பாய் மரப் படகுப்போட்டியில் டிங்கி ஐஎல்சிஏ-4 பிரிவில் நேகா தாக்குர் வெள்ளிப்பதக்கம் வென்றார். ஆசிய விளையாட்டில் இப்பிரிவில் இந்தியா பதக்கம் வெல்வது இதுவே முதல்முறையாகும்.
மத்திய பிரதேசத்தை சேர்ந்த விவசாயியின் 17 வயது மகள் ஆசிய விளையாட்டு போட்டிகளில் இந்தியாவிற்கு கௌரவம் சேர்த்த நிலையில், இந்திய பிரதமர் மோடி, அமித் ஷா, மத்திய விளையாட்டு துறை அமைச்சர் அனுராக் தாக்கூர் முதலியோர் பாராட்டியுள்ளனர். இப்பிரிவில் தாய்லாந்து தங்கப்பதக்கம் வென்றது.
ஆண்கள் பிரிவில் பாய்மரப்படகு போட்டியில் விண்ட்சர்ஃபர் ஆர்எஸ் பிரிவில் இந்தியாவில் ஈபாத் அலி வெண்கலப்பதக்கம் வென்றார். ஆண்கள் 4க்கு 100 தொடர் ஓட்டத்தில் இறுதிச்சுற்றுக்கு இந்தியா தகுதிபெற்றுள்ளது.
ஸ்குவாஸ்:
ஸ்குவாஷில் முதல் சுற்றில் ஆண்கள் பிரிவில் சிங்கப்பூரையும், பெண்கள் பிரிவில் பாகிஸ்தானையும் இந்திய அணி வீழ்த்தியது.
டென்னிஸ்:
டென்னிசில் அங்கிதா ரெய்னா காலிறுதிக்கு முன்னேறினர். எனினும் ராம்குமார் ராமநாதன் ருதுஜா போசலே ஆகியோர் தோல்வியுடன் வெளியேறினர்.
வாள்வீச்சு:
வாள் வீச்சில் இந்திய வீராங்கனை பவானிதேவி காலிறுதியில் சீன வீராங்கனையிடம் தோல்வியடைந்து பதக்க வாய்ப்பை நழுவவிட்டார்.
ஆசிய விளையாட்டு போட்டிகளில் 4வது நாளான இன்று ஆண்கள் ஹாக்கி போட்டியில் இந்திய அணி சிங்கப்பூருடன் விளையாடியது. இதில் இந்திய வீரர்கள் சரமாரியாக கோல் அடித்து எதிரணியினரை திகைக்க வைத்தனர். இறுதியில் 16 - 0 என்ற கோல் கணக்கில் இந்தியா வெற்றிபெற்றது.
கேப்டன் ஹர்மன்பிரீத் சிங் 4 கோல்களும் மந்தீப் சிங் 3 கோல்களும் போட்டனர். அபிஷேக், வருண்குமார் தலா 2 கோல் அடித்தனர். இதற்கு முந்தைய போட்டியில் உஸ்பெகிஸ்தானை இந்தியா 16 கோல் போட்டு வென்றிருந்தது குறிப்பிடத்தக்கது. இந்தியா அடுத்து நடப்பு சாம்பியன் ஜப்பானை வியாழக்கிழமை எதிர்கொள்கிறது.