டைமண்ட் லீக் தடகள போட்டி சுவிட்சர்லாந்தின் லாசானே நகரில் நடைபெற்றது. இதில் ஈட்டி எறிதலில் ஒமிபிக்கில் தங்கப்பதக்கம் வென்ற இந்தியாவின் நீரஜ் சோப்ரா 87.66 மீட்டர் தூரம் எறிந்து முதலிடம் பிடித்தார். 86.20 மீட்டர் தூரம் எறிந்த ஜெர்மனியின் ஜூலியன் வெப்பர் இரண்டாவது இடம் படித்தார்.
டைமண்ட் லீக் தடகள போட்டியில் நீரஜ் சோப்ரா 2வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றுள்ளார். கடந்த மாதம் பயிற்சியின் போது ஏற்பட்ட தசைப்பிடிப்பின் காரணமாக நீரஜ் சோப்ரா ஓய்வில் இருந்தார். இடைப்பட்ட காலத்தில் அவர் 3 பெரிய தொடர்களில் பங்கேற்காமல் இருந்துவந்தார். இந்நிலையில் தனது காயத்திலிருந்து மீண்டு வந்துள்ள நீரஜ், மீண்டும் தன்னுடைய முழு பலத்தை வெளிக்கொண்டுவந்துள்ளார்.
காயத்திலிருந்து மீண்டு வந்தது குறித்து பேசியுள்ள நீரஜ் சோப்ரா, “காயத்தில் இருந்து மீண்டு வருவதை நினைத்து சற்று பதட்டமாக இருந்தேன். இன்னும் என் சிறந்தவற்றிலிருந்து வெகு தொலைவில் இருப்பதை போல உணர்கிறேன். இருப்பினும் அதனை நோக்கி சரியாக நகர்வதை நினைத்து நான் நிம்மதியாக இருக்கிறேன். எப்படி இருந்தாலும் இது என்னுடைய வெற்றி தான், அதை நான் மகிழ்ச்சியுடன் எடுத்துக்கொள்வேன். ஆனாலும் நான் தொடர்ந்து என்னை மெருகேற்ற நினைக்கிறேன்” என்று சோப்ரா தனது வெற்றிக்குப் பிறகு கூறினார்.
மேலும் பேசிய அவர், “நான் என்னுடைய வெற்றியை தேடிக்கொண்டிருந்தேன், அதன்படி இந்த முடிவு எனக்கு மகிழ்ச்சியை தருகிறது. ஆனால் நான் மீண்டும் பயிற்சிக்குச் செல்ல விரும்புகிறேன். என்னை வலிமையாக்கும் சில விஷயங்களைச் சரிசெய்ய விரும்புகிறேன். லொசன் டைமன் லீக் போட்டியில் நான் எப்போதும் சிறப்பாக செயல்பட்டுள்ளேன். முதல் முறையாக பட்டம் வென்ற நிலையில், தற்போது மீண்டும் வென்றுள்ளேன். அடுத்த வருடம் 3வது டைட்டிலையும் வெல்ல ஆவலுடன் காத்திருக்கிறேன். அடுத்த போட்டியான புடாபெஸ்ட் எனக்கு பெரிய போட்டியாக இருக்கும்” என்று பேசியுள்ளார்.