ஒலிம்பிக்கில் தங்கப் பதக்கம் வென்ற தடகள வீரர் நீரஜ் சோப்ரா மூன்றாவது முறையாக 89 மீட்டர் தாண்டி ஈட்டி எறிந்து சாதனை படைத்துள்ளார்.
நீரஜ் சோப்ரா லூசேன் டயமண்ட் லீக்கில் 89.08 மீட்டர் எறிந்து முதல் இடத்தைப் பிடித்து, ஷூரிச்சில் நடக்கும் இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றிருக்கிறார்.
இடுப்பில் ஏற்பட்ட காயத்தால் காமன்வெல்த் தொடரில் விலகிய நீரஜ் சோப்ரா மீண்டும் லூசேன் டயமண்ட் லீக்கில் களத்தில் இறங்கியிருக்கிறார். இந்நிலையில் தனது முதல் முயற்சியிலேயே 89.08 மீட்டர் தொலைவுக்கு ஈட்டி எறிந்ததன் மூலம், 24 வயதான அவர் ஷூரிச்சில் நடக்கும் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார்.
இதுவரை மூன்றுமுறை 89 மீ-க்கு மேல் எறிந்து சாதனை படைத்திருக்கிறார் நீரஜ். மேலும் டயமண்ட் லீக் நிகழ்வில் சோப்ரா முதலிடத்தைப் பிடிப்பது இதுவே முதல் முறையாகும்.
ஒலிம்பிக் தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்த நீரஜ் சோப்ராவுக்கு ஜூலை இறுதியில் ஓரிகானில் நடந்த உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியின் போது இடுப்பு பகுதியில் காயம் ஏற்பட்டது. இதன் விளைவாக, அவரால் பர்மிங்காமில் நடந்த 2022ஆம் ஆண்டுக்கான காமன்வெல்த் தொடரில் பங்கேற்க முடியாமல் போனது.
நீரஜ் இரண்டு முறை தனது சொந்த சிறந்த சாதனையை முறியடித்திருக்கிறார். முன்னர் ஸ்டாக்ஹோம் டயமண்ட் லீக்கில் பங்கேற்ற அவர் 89.94 மீ என்ற புதிய தேசிய சாதனையை பதிவு செய்திருந்தார். இருந்தும் அவரால் ஸ்டாக்ஹோம் லீக் தொடரில் இரண்டாவது இடத்தை தான் பிடிக்க முடிந்தது. இந்நிலையில் தற்போது முதல் இடத்தை பிடித்ததையடுத்து அடுத்த மாதம் ஷூரிச்சில் நடைபெறவுள்ள ஆறு-தடகள டயமண்ட் லீக் இறுதிப் போட்டியில் அவரைத் தக்கவைத்திருக்கிறார் நீரஜ்.
செப்டம்பர் 7-8 தேதிகளில் சுவிட்சர்லாந்தின் ஷூரிச்சில் நடக்கும் டயமண்ட் லீக் இறுதிப் போட்டிக்கு தகுதிபெற ஆண்களுக்கான ஈட்டி எறிபவர்களுக்கு இந்த டயமண்ட் லீக் தான் கடைசி வாய்ப்பாகும்.
இந்நிலையில் நேற்று நடந்த போட்டியில், நீரஜ் சோப்ரா தனது முதல் முயற்சியில் 89.08 மீ பாய்ண்ட்-ஐ பதிவு செய்தார். மற்ற போட்டியாளர்கள் யாராலும் அவரின் இந்த தூர எறிதலுக்கு இணையாக எறிய முடியவில்லை.
24 வயதான நீரஜ் தனது இரண்டாவது முயற்சியில் 85.18 மீ புள்ளியை எட்டினார் மற்றும் மூன்றாவது முயற்சியில் வெளியேற முடிவு செய்தார். சோப்ராவின் நான்காவது முயற்சி பவுல் ஆனதால் தகுதி நீக்கம் செய்யப்பட்டது. இறுதி எறிதலில் 80.04 மீட்டரை பதிவு செய்த அவர் இறுதிப் போட்டியில் பங்கேற்க தகுதி பெற்றார். ஜக்குட் வட்லெஜ்ச் இரண்டாவது இடத்தையும் மற்றும் கியூரிட்ஸ் தாம்சன் மூன்றாவது இடத்தையும் பிடித்தனர்.
இந்நிலையில் இந்த தொடரின் இறுதி போட்டி செப்டம்பர் 7 மற்றும் 8ஆம் தேதிகளில் நடக்கவிருக்கிறது. மேலும் முன்னர் 89.30 மீ மற்றும் 89.94 மீ எறிதலை பதிவு செய்திருந்த நிலையில் தற்போது 89.08 மீ அளவுக்கு ஈட்டி எறிந்து மூன்றாவது முறையாக சாதனை படைத்துள்ளார் நீரஜ் சோப்ரா.