வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான கடைசி ஒரு நாள் போட்டியில் இருந்து இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் தீபக் சாஹர் காயம் காரணமாக நீக்கப்பட்டுள்ளார்.
இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி விசாகப்பட்டிணத்தில் நேற்று நடைபெற்றது. இந்தப் போட்டியில் இந்திய அணி 107 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் இரு அணிகளும் ஒரு வெற்றியைப் பெற்று சமநிலையில் இருக்கிறது.
இரு அணிகளுக்கு இடையிலான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி கட்டாக் நகரில் வரும் 22ம் தேதி ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ளது. இந்நிலையில் நேற்று நடைபெற்றப் போட்டியில் வேகப்பந்து வீச்சாளர் தீபக் சாஹர் முதுகில் காயம் ஏற்பட்டதன் காரணமாக தசை பிடிப்பு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக கடைசி ஒரு நாள் போட்டியில் இருந்து சாஹர் நீக்கப்பட்டுள்ளார்.
இதனையடுத்து அவருக்கு பதிலாக வேகப்பந்து வீச்சாளர் நவ்தீப் சைனி அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். டெல்லி மாநில ரஞ்சி அணிக்காக விளையாடி வரும் சைனி, அண்மையில் ஆந்திராவுக்கு எதிரான போட்டியில் 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதன் காரணமாக அவருக்கு இந்திய அணியில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.