டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளை 5 நாள்களில் இருந்து 4 நாள்களாக குறைப்பதற்கு ஆஸ்திரேலியாவின் முன்னாள் மற்றும் இந்நாள் வீரர்கள் சிலர் அதிருப்தி தெரிவித்து இருக்கின்றனர்.
டெஸ்ட் போட்டிகளை 4 நாட்களாகக் குறைப்பதற்கு சா்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) யோசித்து வருவதாக கடந்த வாரம் செய்திகள் வெளியானது. இதனை 2023 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையில் அறிமுகம் செய்ய ஐசிசி உத்தேசித்திருப்பதாகவும் கூறப்பட்டது. இது குறித்து கருத்து தெரிவித்த பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி "முதலில் ஐசிசி இதனை கொண்டு வரட்டும் பின்பு முடிவு செய்யலாம்" என்று கூறினார்.
ஆனால் இதற்கு ஆஸ்திரேலியாவின் நாதன் லயன் மற்றும் ஜஸ்டின் லாங்கர் ஆகியோர் எதிர்ப்பு தெரிவித்து இருக்கின்றனர். நாதன் லயன் கூறும்போது " டெஸ்ட் கிரிக்கெட்டை 4 நாளாகக் குறைப்பது கேலிக்கூத்தானது. இந்த யோசனையை ஐசிசி பரிசீலிக்காது என்று நம்புகிறேன்" என்றார். ஜஸ்டின் லாங்கா் கூறுகையில் " நான் பாரம்பரியத்தை விரும்புபவன். எனக்கு 5 நாள் டெஸ்ட் கிரிக்கெட்டே விருப்பம்" என்றார்.