இண்டியன்வெல்ஸ் தொடரின் இறுதிப்போட்டியில் ஸ்பெயினைச் சேர்ந்த டென்னிஸ் ஜாம்பவான் ரபேல் நடாலை இளம் வீரர் டெய்லர் ஃபிரிட்ஸி வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றார்.
பி.என்.பி.பரிபாஸ் ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டிகள் அமெரிக்காவின் இண்டியன்வெல்சில் நடந்து வருகின்றன. இதில் ஆடவர் ஒற்றையர் இறுதி போட்டியில், உலக தரவரிசையில் 4வது இடத்தில் இருக்கும் ஸ்பெயின் வீரர் ரபேல் நடால் மற்றும் உலக தரவரிசையில் 20வது இடம் வகிக்கும் 24 வயதுடைய டெய்லர் பிரிட்ஸ் ஆகியோர் மோதினர். இவர்களில், காயத்தினால் அவதிப்பட்ட அமெரிக்க வீரரான டெய்லர் ஃபிரிட்ஸி போட்டியை எப்படி எதிர்கொள்ள போகிறோம் என்ற சந்தேகத்தில் இருந்துள்ளார். எனினும், இந்த போட்டியை தைரியமுடன் எதிர்கொண்டு விளையாடிய அவர், தொடக்கம் முதலே அதிரடி காட்டினார்.
அதிரடியாக விளையாடிய டெய்லர் ஃபிரிட்ஸி மின்னல் வேகத்தில் புள்ளிகளை சேர்த்தார். 21 முறை கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்ற நடாலுக்கு அதிர்ச்சி அளிக்கும் வகையில் 6-3 என்ற புள்ளி கணக்கில் முதல் செட்டை கைப்பற்றினார் டெய்லர். இதனால், 2வது செட்டை கைப்பற்றுவதில் இருவருக்கும் கடும் போட்டி ஏற்பட்டது. மிக நெருக்கமான புள்ளிகளில் இருவரும் பயணிக்க, 2வது செட் அதிக நேரம் நீடித்து அனல் பறக்க நடைபெற்றது. எனினும், அதிரடியாக விளையாடி அடுத்த செட்டையும் 7-6 (7/5) என்ற கணக்கில் கைப்பற்றினார் டெய்லர். இந்த போட்டியில் 6-3, 7-6 (7/5) என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று டெய்லர் சாம்பியன் ஆனார். தொடர்ச்சியாக 20 போட்டிகளில் வெற்றிகளை குவித்து வந்த நடாலின் சாதனைப் பயணத்திற்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டார் இளம் வீரர் டெய்லர்.