டெல்லியை எளிமையாக வென்ற மும்பை : மேட்ச் ரிவ்யூ..!

டெல்லியை எளிமையாக வென்ற மும்பை : மேட்ச் ரிவ்யூ..!
டெல்லியை எளிமையாக வென்ற மும்பை : மேட்ச் ரிவ்யூ..!
Published on

ஐபிஎல் தொடரின் 27வது லீக் போட்டி மும்பை இந்தியன்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகள் இடையே அபுதாபி மைதானத்தில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற டெல்லி கேபிடல்ஸ் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. முதல் பேட்டிங்கை தொடங்கிய டெல்லி அணியில் தொடக்க வீரர் பிருத்வி ஷா 3 பந்துகளில் 4 ரன்கள் மட்டும் எடுத்துவிட்டு வெளியேறினார். ஆனால் மற்றொரு தொடக்க வீரரான ஷிகர் தவான் சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்தினார். அவருடன் சிறிது நேரம் களத்தில் நின்ற ரஹானே 15 பந்துகளில் 15 ரன்களை எடுத்துவிட்டு ஆட்டமிழந்தார்.

இதையடுத்து களமிறங்கிய கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். ஷிகர் தவானுடன் ஜோடி சேர்ந்து அணியின் ஸ்கோரை வேகமாக உயர்த்தினார். 33 பந்துகளில் 42 ரன்கள் விளாசிய ஸ்ரேயாஸ் அரை சதம் அடிக்காமல் விக்கெட்டை இழந்தார். பின்னர் வந்த ஸ்டோயினிஸ் 13 (8) ரன்களில் எதிர்பாராத விதமாக ரன் அவுட் ஆனார். கடைசி நேரத்தில் களமிறங்கிய அலெக்ஸ் கேரே தனது பங்கிற்கு 14 (9) ரன்களை சேர்த்தார். தொடக்க வீரராக களமிறங்கியிருந்த தவான் இறுதிவரை ஆட்டமிழக்காமல் 69 (52) ரன்களை குவித்திருந்தார். 20 ஓவர்கள் முடிவில் டெல்லி அணி 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 162 ரன்கள் எடுத்தது.

அந்த அணியில் தொடக்க வீரர் ஷிகர் தவான் அரை சதம் கடந்து கடைசி வரை களத்தில் நின்றது பலமாகவும், இறுதி நேரத்திலும் அவர் அதிரடியை வெளிப்படுத்தாதது பலவீனமாகவும் அமைந்தது. ஸ்ரேயாஸின் ரன்கள் டெல்லியின் ஸ்கோரை 150 ரன்களை கடந்து கொண்டு செல்ல உதவியது. மும்பையின் பந்துவீச்சில் பவுலர்கள் யாரும் ரன்களை வாரி வழங்காதது பலமாக இருந்தது. 4 ஓவர்கள் வீசிய குருனல் பாண்ட்யா 26 ரன்களை மட்டுமே கொடுத்து 2 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்திருந்தார். இதேபோன்று 4 ஓவர்கள் வீசிய பும்ரா விக்கெட் எடுக்கவில்லை என்றாலும் 26 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்திருந்தார். ராகுல் சாஹர் 4 ஓவர்கள் வீசி 27 ரன்கள் மட்டுமே வழங்கியிருந்தார்.

162 ரன்கள் என்ற எட்டக்கூடிய இலக்கை எதிர்த்து களமிறங்கிய மும்பை அணியில் தொடக்க வீரரும் கேப்டனுமான ரோகித் ஷர்மா 5 (12) ரன்களில் விக்கெட்டை பறிகொடுத்தார். மறுபுறம் குயிண்டான் டி காக் அதிரடியான பேட்டிங்கை வெளிப்படுத்தினார். 4 பவுண்டரிகள், 3 சிக்ஸர்கள் என 36 பந்துகளுக்கு 53 ரன்களை குவித்துவிட்டு அவர் சென்றார். அவரைத்தொடர்ந்து அதிரடி காட்டத்தொடங்கிய சூர்யகுமார் யாதவ் 6 பவுண்டரி ஒரு சிக்ஸர் என 32 பந்துகளில் 53 ரன்களை விளாசிவிட்டு பெவிலியன் திரும்பினார். அவருடன் ஜோடி சேர்ந்த ஆடிய இஷான் கிஷண் தனது பங்கிற்கு 15 பந்துகளில் 28 ரன்களை எடுத்தார். இதில் 2 சிக்ஸர் மற்றும் 2 பவுண்டரிகளும் அடங்கும்.

அதைத்தொடர்ந்து களமிறங்கிய ஹர்திக் பாண்ட்யா ரன் எதுவும் எடுக்காமல் ஆட்டமிழந்து சொதப்பினார். கடைசி ஓவரில் 7 ரன்கள் எடுக்க வேண்டும் என்ற நிலையில், பொலார்ட் மற்றும் குருனல் பாண்ட்யா களத்தில் இருந்தனர். முதல் பந்தில் குருனல் பாண்ட்யா ஒரு பவுண்டரியை அடிக்க, 5 பந்துகளில் 3 ரன்கள் என இலக்கு எளிதானது. அடுத்தடுத்து 2 சிங்கிள் போக, 4வது பந்தில் 4 ரன்களை விளாசி குருனல் பாண்ட்யா வின்னிங் ஷாட் அடித்தார். இதனால் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் மும்பை எளிமையான வெற்றியை பதிவு செய்தது.

மும்பை பேட்டிங்கில் ரோகித் ஷர்மா சொற்ப ரன்களில் அவுட் ஆனாலும், குயிண்டான் டி காக் மற்றும் சூர்யகுமார் யாதவின் அதிரடி அணிக்கு வெற்றியை எளிதாக்கியது. இஷான் கிஷணின் பேட்டிங்கும் பக்கபலமாக அமைந்தது. ஹர்திக் பாண்ட்யாவின் டக் அவுட் மும்பை அணிக்கு நெருக்கடியை கொடுப்பது போல இருந்தாலும், குருனல் பாண்ட்யா மற்றும் பொலார்ட்டின் பேட்டிங் மும்பைக்கு வெற்றியை பெற்றுக்கொடுத்தது. டெல்லி அணியின் பவுலர்கள் ரன்கள் கட்டுப்படுத்தியிருந்தாலும், அடுத்தடுத்து விக்கெட்டுகளை கைப்பற்றமால் இருந்தனர். சிறப்பாக பந்துவீசிய ரபாடா 2 விக்கெட்டுகளை கைப்பற்றியிருந்தார். அவருக்கு ஒரு ஓவரை நிறுத்தி வைத்து கடைசி ஓவரில் பயன்படுத்தியிருக்கலாம் எனத் தோன்றியது. மற்றபடி டெல்லியின் பந்துவீச்சும் பாராட்டத்தக்க வகையில் தான் இருந்தது.

மொத்தத்தில் வலுவான அணியாக தெரிந்த டெல்லியை கஷ்டமில்லாமல் கதையை முடித்து புள்ளிகள் பட்டியலில் முதலிடத்தை அடைந்தது மும்பை இந்தியன்ஸ்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com