அமீரகத்தில் நடைபெற்று வரும் 14 ஆவது சீசன் ஐபிஎல் போட்டியின் இன்றைய ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதுகின்றன.
இதுவரை 8 ஆட்டங்களில் விளையாடியுள்ள மும்பை இந்தியன்ஸ் 4 வெற்றி, 4 தோல்வி என்று 8 புள்ளிகளுடன் பட்டியலில் 4-வது இடத்தில் இருக்கிறது. அமீரகத்தில் நடைபெற்ற முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்சிடம் 20 ரன் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. அந்தப் போட்டியில் கேப்டன் ரோகித் சர்மா காயம் காரணமாக விளையாடவில்லை. அதனால் கேப்டன் பொறுப்பை பொல்லார்ட் கவனித்தார். அதேபோலவே மும்பையின் நட்சத்திர ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யாவும் விளையாடவில்லை. இதனால் இன்றையப் போட்டியில் ரோகித், ஹர்திக் ஆகியோர் களமிறங்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இயான் மோர்கன் தலைமையிலான கொல்கத்தா அணி 3 வெற்றி, 5 தோல்விகளுடன் 6 புள்ளிகள் பெற்று 6-வது இடத்தில் உள்ளது. முந்தைய ஆட்டத்தில் சுழல் ஜாலத்தால் பெங்களூருவை வெறும் 92 ரன்னில் சுருட்டிய கொல்கத்தா அதே உத்வேகத்துடன் மும்பையையும் மிரட்ட காத்திருக்கிறது. சுப்மன் கில், நிதிஷ் ராணா, தினேஷ் கார்த்திக், சுனில் நரின், வருண் சக்ரவர்த்தி, ஆந்த்ரே ரஸ்செல் என்று நட்சத்திர பட்டாளங்களை கொண்டுள்ள கொல்கத்தா அணி, மும்பைக்கு கடும் நெருக்கடி கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மும்பைக்கு எதிராக கடைசியாக மோதிய 13 ஆட்டங்களில் 12 இல் தோற்றுள்ளது கொல்கத்தா அணி. ஆனால் அமீரகத்தில் நடைபெற்று வரும் ஐபிஎல்லில் மும்பையை காட்டிலும் கொல்கத்தா பலமாகவே இருப்பதாக தெரிகிறது. எனினும் இன்றயப் போட்டி முடிவில் யார் பலம் வாய்ந்தவர்கள் என தெரிந்துவிடும்.