ஃபிட்னஸில், மகேந்திர சிங் தோனி மற்றவர்களுக்கு உதாரணமாக இருக்கிறார் என்று இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் பிட்னஸ் பயிற்சியாளர் ராம்ஜி தெரிவித்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணி, ஜூலை மாதம் இங்கிலாந்து செல்கிறது. அங்கு 3 டி20 தொடர், 3 ஒரு நாள் போட்டி, 5 டெஸ்ட் தொடர் ஆகியவற்றில் பங்கேற்கிறது. ஜூலை 3-ம் தேதியில் இருந்து செப்டம்பர் 11-ம் தேதி வரை அங்கு சுற்றுப்பயணம் செய்து விளையாடுகிறது. அதற்கு முன்பாக, அயர்லாந்து அணியுடன் இரண்டு டி20 போட்டிகளில் இந்திய அணி விளையாடுகிறது. ஜூன் 27 மற்றும் 29-ம் தேதிகளில் இந்தப் போட்டி நடக்கிறது. இந்தத் தொடர்களுக்கு முன்னணி வீரர்களோடு இளம் வீரர்களும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அதோடு வெஸ்ட் இண்டீஸ் அணியுடன் விளையாடும் இந்திய ஏ அணியும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதில் பங்கேற்கும் வீரர்களுக்கு பெங்களூரில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் உடல் தகுதி தேர்வு ஜூன் 5 ஆம் தேதி முதல் 10ஆம் தேதி வரை நடக்கிறது. சுமார் 40 வீரர்கள் இந்த உடற் தகுதித் தேர்வில் பங்கேற்கின்றனர். இதில் ’யோ யோ’ டெஸ்ட் கட்டாயம் என்பதால் வீரர்கள் கடுமையான பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், பதினோறாவது ஐபிஎல் சாம்பியன் கோப்பையை வென்றுள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ஃபிட்னஸ் பயிற்சியாளராக இருந்த ராம்ஜி ஸ்ரீனிவாசன், தோனியை புகழ்ந்துள்ளார். அவர் கூறும்போது, ’மற்ற வீரர்களை விட இப்போதும், ஃபிட்னஸில் தோனி சிறப்பாக இருக்கிறார். மற்ற வீரர்களுக்கு உதாரணமாக இருக்கிறார். 36 வயதிலும் அவரது உடலமைப்பை பாருங்கள். அவர் வருடம் முழுவதும் விளையாடுவதில்லை என்றாலும் ஃபிட்னஸில் கச்சிதமாக இருக்கிறார். இளம் வீரர்கள், அவரைப் பின்பற்றவேண்டும்’ என்று கூறியுள்ளார்.