இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி அடுத்த மாதம் ஜூலை 2 ஆம் தேதியிலிருந்து ஆன்லைனில் விளையாட்டு வீரர்களுக்குப் பயிற்சி அளிக்கப் போவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
தோனி வருகின்ற ஜூலை மாதம் 2 ஆம் தேதியிலிருந்து ஆன்லைன் கிரிக்கெட் பயிற்சி மையத்தை நிறுவ இருப்பதாகத் தனியார் ஆங்கில இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது. இந்தப் பயிற்சி மையத்தின் இயக்குநராகத் தென் ஆப்பிரிக்க வீரரான Daryll cullinan இயங்கப்போவதாகவும் அதே சமயத்தில் தோனியின் தலைமையின் கீழ் பயிற்சி மையம் இயங்கப்போவதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இது குறித்து தோனியுடன் கைகோர்த்துள்ள ஆர்கா ஸ்போர்ட்ஸ் நிறுவனம் கூறும் போது “ நாங்கள் இந்த முறையில் ஏற்கனவே 200 பயிற்சியாளர்களுக்குப் பயிற்சி அளித்திருக்கிறோம். அவர்களும் இப் பயிற்சியின் மூலம் நல்ல பலனை அடைந்துள்ளனர். வருகின்ற ஜூலை 2 ஆம் தேதியிலிருந்து விளையாட்டு வீரர்களுக்குப் பயிற்சி அளிக்க உள்ளோம். இந்தப் பயிற்சிகள் வீரர்களைக் களத்தில் சிறப்பாகச் செயலாற்றுவதற்கு உதவி புரியும். தோனி இதற்குத் தலைமைப் பொறுப்பாளராக இருக்கிறார். மற்றப் பயிற்சியாளர்கள் வீரர்களுக்கான பாடங்களை வழங்குவார்கள்” எனக் கூறியுள்ளது.
முன்னதாக கடந்த 2017 ஆம் ஆண்டு துபாயில் தோனி இதே போன்று ஒரு பயிற்சி மையத்தை நிறுவினார். ஆனால் அப்போது அவர் கிரிக்கெட் போட்டிகளில் கவனம் செலுத்தி வந்ததால், அவரால் அதில் போதிய கவனம் செலுத்த முடியவில்லை. அதனால் அந்தப் பயிற்சி மையம் கடந்த ஆண்டு மூடப்பட்டது.
பல மாதங்களுக்கு தோனி கிரிக்கெட்டிலிருந்து விலகி இருப்பது உறுதியாகியிருப்பதால், அவர் இதில் அதிகமான நேரத்தைச் செலவிட முடியும். இருப்பினும் அவரால் ஒரு பயிற்சியாளர் போல முழு நேரத்தைச் செலவிடமுடியுமா எனத் தெரியவில்லை? அவர் ஜார்கண்ட் மாவட்ட அணியினருக்கு வழிகாட்டியாக இருந்து வருவதாகச் சொல்லப்படுகிறது