மகேந்திர சிங் தோனி, இப்போதும் சிறந்த கீப்பர் மற்றும் அருமையான ஃபினிஷர்தான் என்று தேர்வுக்குழுத் தலைவர் எம்.எஸ்.கே பிரசாத் தெரிவித்தார்.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி, உலகக் கோப்பைக்குப் பின் ஓய்வு பெறுவார் என்று கூறப்பட்டது. அவர் ஓய்வு பற்றி எதுவும் கூறவில்லை. அவர் ஓய்வு பெற வேண்டும் என்று சிலரும் கூடாது என்று சிலரும் மாறி மாறி கருத்துத் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் ராணுவப் பயிற்சி பெற இருப்பதால், வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான அணியில் இருந்து தன்னை விடுவிக்கும்படி, தோனி கேட்டுக்கொண்டிருந்தார். இதையடுத்து அவர், ராணுவத்தின் பாராசூட் ரெஜிமெண்டில் வீரர்களுடன் இணைந்து பயிற்சிப் பெற்றார். நேற்று முதல், ’விக்டர் படையணி’யுடன் இணைந்து காஷ்மீரில் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகிறார்.
இந்நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய தேர்வுக்குழுத் தலைவர் எம்.எஸ்.கே பிரசாத், ’தோனி இப்போதும் சிறந்த கீப்பர் மற்றும் அருமையான ஃபினிஷர்தான்’ என்று தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் கூறும்போது, ’’குறுகிய ஓவர் போட்டிகளில் தோனி, இப்போதும் சிறப்பாகவே செயல்படுகிறார். உலகக் கோப்பை தொடரில், பேட்ஸ்மேனாகவும் விக்கெட் கீப்பராகவும் இந்திய அணியின் பலமாக இருந்தவர் தோனி. அதோடு தனது அனுபவத்தால் கேப்டனுக்கு உதவியாகவும் இருந்தார். அவருக்கு இணையாக மற்ற விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன்களை உருவாக்கி வருகிறோம். இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து தென்னாப்பிரிக்கா, பங்களாதேஷ் அணிகள் விளையாட இருக்கின்றன. இதில் தோனி சேர்த்துக்கொள்ளப்படுவாரா என்று கேட்கிறார்கள். அணியின் தேவைக்கேற்ப ஆட, ரிஷாப்புக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க இருக்கிறோம். அவருக்கு நம்பிக்கையை ஏற்படுத்தும் விதமாக செயல்பட உள்ளோம்’’ என்றார்.