கொரோனா வைரஸ் பாதிப்பு நீங்கும்வரை எந்த விளம்பரப்படம் மற்றும் நிகழ்ச்சிகளில் ஈடுபட ஒப்பந்தம் செய்யப்போவதில்லை என தோனி முடிவு செய்துள்ளார்.
ஓராண்டு பக்கமாக தோனி கிரிக்கெட் விளையாடாமல் இருந்து வந்தார். இதையடுத்து அவர் ஐபிஎல் 2020ல் விளையாடுவார் என செய்திகள் வெளியாகின. இதனால் தோனி ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்தில் இருந்தனர். ஆனால் கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக ஐபிஎல் ஒத்திவைக்கப்பட்டது.
இதனால் தோனி தன் சொந்த ஊரான ராஞ்சியில் உள்ள பண்ணை வீட்டிலேயே தங்கி உள்ளார். அங்கு அவரது சொந்த நிலத்தில் இயற்கை விவசாயம் உள்ளிட்ட பணிகளில் முழுமையாக தன்னை ஈடுபடுத்திக்கொண்டுள்ளார். இதுகுறித்த புகைப்படங்களும் சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது.
இதனிடையே கொரோனா நெருக்கடி காலத்தில் தோனி நன்கொடையாக வெறும் ஒரு லட்சம் ரூபாய் கொடுத்தார் என செய்தி வெளியானது. அதனால் பலரும் அவரை விமர்சிக்கத்தொடங்கினர். இதற்கு தோனியின் மனைவி சாக்ஷி பதிலடி கொடுத்தார்.
இந்நிலையில், தோனியின் மேலாளரும் குழந்தை பருவ நண்பருமான மிஹிர் திவாகர், கொரோனா தொற்றிலிருந்து வாழ்க்கை இயல்பு நிலைக்கு வரும் வரை எந்தவொரு பிராண்ட் ஒப்புதல்களையும் செய்ய வேண்டாம் என்று கூறியதாகத் தெரிவித்துள்ளார்.
மேலும், “நாட்டுப்பற்று தோனியின் ரத்தத்திலேயே உள்ளது. நாட்டுக்காக சேவை செய்வதாக இருக்கட்டும், நிலத்தில் விவசாயம் செய்வதாக இருக்கட்டும், அதில் அவர் தீவிரமாக இருக்கிறார். அவரிடம் 40 - 50 ஏக்கரில் நிலங்கள் உள்ளன. அதில் இயற்கை விவசாயம் செய்து பப்பாளி, வாழை உள்ளிட்டவற்றை வளர்த்து வருகிறார். பிராண்டுகளுக்கு விளம்பரம் செய்வதை தோனி நிறுத்தி விட்டார். வாழ்க்கை இயல்பு நிலைக்கு திரும்பும் வரை அவர் எந்த வித வருவாய் ஈட்டும் செயல்களிலும் ஈடுபடப் போவதில்லை எனக் கூறி உள்ளார்” எனத் தெரிவித்தார்.