“எங்கே போனது தோனியின் வியூகங்கள்??” சிஎஸ்கே சொதப்பல்களும்.. தொடர் தவறுகளும்!

“எங்கே போனது தோனியின் வியூகங்கள்??” சிஎஸ்கே சொதப்பல்களும்.. தொடர் தவறுகளும்!
“எங்கே போனது தோனியின் வியூகங்கள்??” சிஎஸ்கே சொதப்பல்களும்.. தொடர் தவறுகளும்!
Published on

எப்போதும் இல்லாத அளவிற்கு நடப்பு ஐபிஎல் சீசனில் பத்து ஆட்டங்கள் விளையாடியுள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெறும் மூன்று ஆட்டங்களில் தான் வென்றுள்ளது. 

ஐபிஎல் என்றாலே அதில் தோனி தலைமையிலான சென்னை அணியின் ஆதிக்கம் கொஞ்சம் தூக்கலாக இருக்கும். 

ஆனால் இந்த முறை அது எல்லாம் மொத்தமாக மிஸ் ஆகியுள்ளது. 

சென்னையின் இந்த நெருக்கடியான நிலைக்கு என்ன காரணம் என்பதை அலசுவோம்…

தோனியின் ஃபார்ம்

தோனி என்ற ஒற்றை ஆளுமை தான் சென்னை அணியின் பலம். கிரிக்கெட் உலகின் பவர் ஹிட்டரும், கிரேட் ஃபினிஷருமான தோனி உள்ளூர் முதல் சர்வதேச கிரிக்கெட் வரை பலமுறை தான் ஆடுகின்ற அணிக்காக இறுதி வரை  ஆட்டத்தை  எடுத்துச்  சென்று  அதில் வெற்றியும் பெற்று கொடுத்துள்ளார் தோனி. அப்படி சென்னை அணிக்காகவும் தோனி சில பல சம்பவங்களை செய்தது உண்டு. 

இருப்பினும் இந்த சீசனில் அவர் ஏனோ பேட்டிங்கில் சோபிக்காதது சென்னை அணிக்கு பின்னடைவாக அமைந்தது. 

டார்கெட் செட் செய்யும் போதும், பெரிய ஸ்கோர்களை சேஸ் செய்யும் போதும் தோனி சென்னைக்காக ரன் சேர்க்க தவறினார். அவர் பேட்டிங்கில் ஜொலித்திருந்தால் சென்னையும் ஜெயித்திருக்கலாம். 

ரெய்னா - ஹர்பஜனுக்கு மாற்று வீரர்களை ஒப்பந்தம் செய்யாதது 

சென்னை அணியின் சின்ன தல ரெய்னாவும், அனுபவ OFF ஸ்பின்னர் ஹர்பஜன் சிங்கும் இந்த சீசனில் இருந்து தனிப்பட்ட காரணங்களுக்காக விலகினர்.

அவர்கள் அணியில் விட்டுச் சென்ற வெற்றிடத்தை சென்னை அணியின் நிர்வாகம் மாற்று வீரர்களை கொண்டு நிரப்புவதற்கான ஆப்ஷன்கள் இருந்த போதும் அதை செய்ய தவறியது சி.எஸ்.கேவை இந்த சீசனில் ஆட்டம் காண செய்துள்ளது. 

தாஹிர் விளையாடாதது 

கடந்த ஐபிஎல் சீசனில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய இம்ரான் தாஹிர் இந்த சீசனில் ஒரே ஒரு ஆட்டத்தில் கூட விளையாட வாய்ப்பு கிடைக்காமல் பெஞ்சில் உட்கார வைக்கப்பட்டுள்ளார். 

இந்த சீசனின் ஆரம்பத்தில் சுழற்பந்து வீச்சுக்கு ஏற்ற வகையில் அமீரக மைதானங்கள் மாறியதும் ஏலத்தில் எடுக்கப்பட்ட ஸ்பின்னர்களை அணிகள் பயன்படுத்தும் என விமர்சகர்கள் கருத்து சொல்லியிருந்தனர். அப்படி இருந்தும் சீசனின் பிற்பாதியில் சென்னை தாஹிரை பயன்படுத்தி கொள்ளவில்லை. பியூஷ் சாவ்லா, கரன் ஷர்மா மாதிரியான சென்னையின் ஸ்பின்னர்களை பலமாக எதிரணி பேட்ஸ்மேன்கள் வெளுத்து வாங்கிய போதும் தாஹிர் ஆடும் லெவனில் சேர்க்கப்படமால் இருந்தார்.

விசித்திரமான வியூகங்கள் 

ஒவ்வொரு நொடியும் சென்னை ஆட்டத்தின் வியூகங்களை மாற்றிக் கொண்டே இருந்ததும் இந்த சீசனில் சொதப்பலுக்கு முக்கிய காரணமாக அமைந்தது. பேட்டிங் ஆர்டரில் ஒழுங்கு இல்லாதது, ஃபார்ம் அவுட்டில் உள்ளவர்களுக்கு மீண்டும் மீண்டும் வாய்ப்பு கொடுப்பது, இளம் வீரர்களுக்கு வாய்ப்பு கொடுக்க தவறுவது, தொடர் தோல்வியை சந்தித்தாலும் ஆடும் லெவனை மாற்றாதது என பழைய பார்முலாவை விடாப்பிடியாக பிடித்ததும் சென்னையின் தோல்விக்கு காரணம். 

மீண்டும் மீண்டும் கேதார் ஜாதவை அணியில் சேர்ப்பது

எட்டு ஆட்டங்களில் விளையாடியுள்ள கேதார் ஜாதவ் வெறும் 62 ரன்களை மட்டுமே எடுத்துள்ளார். அவரது மோசமான ஃபார்மினால் இடையில் ஆடும் லெவனிலிருந்து கழட்டி விடப்பட்ட ஜாதவ் மீண்டும் அணியில் சேர்க்கப்பட்டார். அவரை அணியில் சேர்த்தது ஏன் என ரசிகர்கள் கேள்வி எழுப்பினர். பேரண்டத்தில் சில விளக்க முடியா கேள்விகளுக்கு பதில்கள் கிடைப்பதில்லை. அந்த லிஸ்டில் ஜாதவ் ஏன் அணியில் சேர்க்கப்பட்டார் என்ற கேள்வியை சேர்த்து கொள்ளலாம். 

இதற்கெல்லாம் சென்னை தீர்வு காண வேண்டியுள்ளது. அதை சரி செய்தால் சென்னை அடுத்ததாக விளையாட உள்ள நான்கு ஆட்டங்களிலும் வெற்றி பெற்று தோற்றாலும் அது டீசெண்டான தோல்வியாக இருக்கும்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com