சிஎஸ்கே கேப்டன் தோனியின் மகள் ஜிவா மும்பை இண்டியஸ் அணிக்கு தெரிவித்த வாழ்த்து வீடியோவை ரோகித் ஷர்மா ட்விட்டரில் பகிர்ந்துள்ளார்.
ஐபிஎல் என்றாலே கிரிக்கெட் ரசிகர்களுக்கு கொண்டாட்டம் தான். இந்த கொண்டாட்டத்தின் நடுவில், ரசிகர்களின் சமூக வலைத்தள மோதல்களும், மீம்ஸ் மோதல்களும் நடைபெறும். குறிப்பாக சென்னை மற்றும் மும்பை ரசிகர்கள் சமூக வலைத்தளங்கள் முடங்கும் அளவிற்கு மோதிக்கொள்வார்கள். விஜய் மற்றும் அஜித் படம் ஒன்றாக வெளிவருவது போல, மும்பை-சென்னை மேட்ச் அன்று ஐபிஎல் ரசிகர்களின் மீம்ஸ் மோதல் இருக்கும்.
சென்னை ரசிகர்கள் இந்த முறை சென்னை அரையிறுதிப் போட்டிக்கு முன்னேறியதை விட, மும்பை இந்தியன்ஸ் அரையிறுதி வரவில்லை என்பதற்கு அதிக மீம்ஸ் போட்டனர். குறிப்பாக கடந்த இரண்டு ஆண்டுகளாக சென்னை அணி இல்லை. அதனால் மும்பை கோப்பையை வென்றது என்றெல்லாம் சென்னை ரசிகர்கள் கிண்டல் அடித்து வந்தனர். அதேபோல் மும்பை ரசிகர்களும் தாங்கள் மூன்று முறை கோப்பையை வென்றவர்கள் என்று பெருமிதம் பேசினர். இந்த மோதல் ஒரு தொடர்கதையாகவே இருந்து வருகிறது.
இந்நிலையில் ரோகித் ஷர்மா நகைச்சுவையான ஒரு வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில், தோனியின் மகள் ஜிவா, “எஞ்ஜாய் மும்பை” என்று கத்துகிறார். இதை வீடியோவாக பதிவு செய்துள்ள ரோகித், அதை ட்விட்டரில் தோனி மற்றும் அவரது மனைவிக்கு டேக் செய்துள்ளார். இதன்மூலம், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் “தல தோனி மகளே எங்க மும்பை ரசிகர் தான்” என்பதை ரோகித் ஷர்மா தெரிவித்துள்ளார். இந்த வீடியோவை மும்பை மற்றும் சென்னை அணியின் ரசிகர்கள் பகிர்ந்து வருகிறார்கள். அதோடு, சென்னை ரசிகர்கள் இந்த வீடியோவை கலாய்த்தும் மீம்ஸ் போட்டுள்ளனர்.