தோனி காலத்தில் வேகப்பந்து வீச்சாளர்களிடையே பெரியளவில் அனுபவம் இல்லை, அதனால்தான் அப்போது ஜொலிக்கவில்லை என்று இந்திய அணியின் வேகப் பந்து வீச்சாளர் இஷாந்த் சர்மா தெரிவித்துள்ளார்.
ரஞ்சி தொடருக்கு பின்பு அண்மையில் செய்தியாளர்களை சந்தித்த இஷாந்த் சர்மா பல்வேறு விஷயங்களை பகிர்ந்துகொண்டார். அப்போது ஏன் தோனி காலத்தில் வேகப்பந்து வீச்சு சுமாராக இருந்தது என்றும் இப்போது ஏன் கோலி தலைமையில் வேகப்பந்து வீச்சு சூப்பராக இருக்கிறது என்பதற்குமான வேறுபாட்டை விளக்கினார்.
அப்போது பேசிய இஷாந்த் " தோனி காலத்தில் அணியிலிருந்த சிலருக்கு பெரிதளவில் அனுபவம் கிடையாது. அதேசமயம், வேகப்பந்து வீச்சாளர்கள் சுழற்சி முறையில் பயன்படுத்தப்பட்டனர். ஒரு கூட்டணியாக தொடர்ச்சியாக சிறப்பாக செயல்பட முடியாமல் போனது. இதுவும் ஒரு காரணமாக இருக்கலாம். மேலும் வேகப்பந்து வீச்சில் 3 முதல் 4 பந்துவீச்சாளர்கள் என்றால் அது அவர்களுக்குள் இருக்கும் தொடர்பை அதிகரிக்கும். முன்னதாக, 6 முதல் 7 வேகப்பந்துவீச்சாளர்கள் இருந்தனர். அதனால், எங்களுக்குள் அப்போது தொடர்பு இல்லை".
விரோட் கோலி குறித்து பேசிய இஷாந்த் " விராட் கோலி பொறுப்பேற்றபோது, நாங்கள் போதிய அனுபவத்தைப் பெற்றிருந்தோம். அது எங்களுக்கு உதவியது. அதிகம் விளையாடி, ஓய்வறையில் தங்கி குடும்பத்தினரைக் காட்டிலும் அதிக நேரத்தை அணியுடன் செலவிட்டால் அங்கு ஆலோசனைகள் வெளிப்படையாக இருக்கும். இதன்பிறகு களத்தில் இறங்கினால் அதை அனுபவித்து விளையாடலாம். அது வேறு மாதிரியான ஒரு உணர்வு. அதனால்தான் இப்போதுள்ள அணி வேகப்பந்து வீச்சில் ஜொலிக்கிறது" என்றார் அவர்