ஆசியக் கோப்பை தொடர் முக்கியமான கட்டத்தை எட்டியுள்ளது. இந்திய அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ள நிலையில், மற்றொரு அணி எது என்பதை தீர்மானிக்கும் போட்டி வங்கதேசம் - பாகிஸ்தான் இடையே இன்று நடைபெறவுள்ளது. இந்தப் போட்டியில் வெல்லும் அணி வெள்ளிக் கிழமை நடைபெறும் இறுதிப் போட்டியில் இந்தியாவுடன் மோதும்.
ஆசியக் கோப்பை தொடரில் தொடக்கம் முதலே ஆப்கான் அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. ரஷித் கான் உள்ளிட்ட வீரர்கள் தங்களது சிறப்பான ஆட்டத்தால் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்துள்ளனர். ஒரு அனுபவம் வாய்ந்த அணியை போல் தொடர்ச்சியாக 50 ஓவர்களை முழுமையாக விளையாடுகிறார்கள். அனுபவம் வாய்ந்த அணிகளையே தோற்கடித்துள்ளார்கள். லீக் போட்டிகளின் முடிவில் நிச்சயம் ஆப்கான் அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறும், கோப்பையை கூட வெல்லும் என கருத்துக்கள் எழுந்தன. அந்த அளவிற்கு ஆப்கான் சிறப்பாக விளையாடியது.
இந்தியாவுக்கு எதிரான போட்டியிலும் ஆப்கான் அணி தனது முத்திரையை பதித்தது. முதலில் விளையாடிய 252 ரன்கள் அடித்த ஆப்கான் அணி, பின்னர் விளையாடிய இந்திய அணியையும் அதே ரன்களில் கட்டுப்படுத்திவிட்டது. இதனால், போட்டி டிராவில் முடிந்தது. பாகிஸ்தானை ஊதி தள்ளுவதை போல் எளிதில் வென்ற இந்திய அணி ஆப்கானிடம் போட்டியை டிராவில் முடித்தது. இது இந்திய ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை அளித்தது.
இந்நிலையில், நேற்று போட்டிக்கு பின்னர் பேசிய கேப்டன் தோனி ஆப்கான் அணியை புகழ்ந்து தள்ளினார். “ஆப்கானிஸ்தான் வீரர்களின் கிரிக்கெட் திறன் எவ்வளவோ முன்னேறி உள்ளது. ஆசியக் கோப்பை தொடங்கியது முதலே அவர்களின் விளையாட்டு தொடர்ச்சியாக பாராட்டும் படியாக உள்ளது. அவர்களின் விளையாட்டை நாங்கள் ரசித்து மகிழ்ந்தோம். அவர்கள் மிகவும் சிறப்பாக விளையாடினார்கள். அவர்கள் அற்புதமாக பேட்டிங் செய்தார்கள். விக்கெட்கள் மெதுவாக வீழ்ந்தாலும், இந்தத் தொடர் முழுவதும் அவர்கள் அற்புதமாக பந்துவீசினார்கள். அவர்களின் பீல்டிங்கும் சிறப்பாக இருந்தது” என்றார் தோனி.