சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பயிற்சியாளராக இருப்பவர் பாலாஜி. இவர் கடந்த மார்ச் மாதத்தின் முதல் இரண்டு வாரங்கள் தோனிக்கு பயிற்சி அளித்தார்.
இந்நிலையில், பயிற்சியின் போது தோனியுடன் ஏற்பட்ட அனுபவம் குறித்து கூறியுள்ள பாலாஜி, “தோனி 6 மாதங்கள் விளையாடவில்லை என்பதை நாம் ஒரு பொருட்டாக எடுத்துக்கொள்ளக் கூடாது. அது பெரிய விஷயமில்லை. டைகர் உட்ஸ் (பிரபல கோல்ஃப் விளையாட்டு வீரர்), ரோஜெர் ஃபெடெரெர் (பிரபல டென்னிஸ் வீரர்) ஆகியோரை நீங்கள் பார்த்தால் தெரியும். அவர்கள் நீண்ட தொடர்களில் விளையாடாமல் மீண்டும் ஃபார்மிற்கு வந்துள்ளனர். எனவே இடைவேளை என்பது ஒருவரை ஓய்ந்துபோகச் செய்யாது. அவர்களின் திறமையையும் மாற்றிவிடாது. இது தோனிக்கும் பொருந்தும். அவர் பயிற்சி எடுக்க வரும்போது பார்த்தேன், அவர் கொஞ்சம் கூட சளைத்துப்போகவில்லை. அப்படி இருப்பது மிகவும் பிரமாதமானது” என்று தெரிவித்துள்ளார்.
முன்னதாக, கொரோனா வைரஸால் நாடு முழுவதும் விதிக்கப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவு காரணமாக ஐபிஎல் தொடர் காலவரையறை இன்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதனால் தோனியின் கிரிக்கெட் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது. ஏனென்றால், ஐபிஎல் போட்டியில் தோனியின் ஆட்டத்தை பொறுத்து அவர் டி20 உலகக் கோப்பைக்கு தேர்வு செய்யப்பட வாய்ப்பிருப்பதாக கூறப் பட்டது.