நெட்டிசன்கள் குறிப்பிடுவதைப்போல் தனது மகனுக்கு வயதாகவில்லை என்று தோனியின் தாய் கூறியுள்ளார்.
கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்னர் தோனி நீண்ட தலைமுடியை வைத்தார். அதன்பின்னர் அதை எடுத்துவிட்டார். 2011 உலகக் கோப்பை வெற்றிக்குப் பின்னர் தனது தலையை மொட்டையடித்து அனைவரையும் திகைக்க வைத்தார். இடையில், அவர் தாடி வைக்க ஆரம்பித்தார். ஆனால் மீண்டும் 2019 உலகக் கோப்பைக்கு முன்பு சுத்தமான மொட்டை தலைக்கு மாறினார்.
இதனிடையே எம்.எஸ்.தோனி, தனது மகளுடன் பண்ணை வீட்டில் விளையாடும் காட்சி ஒன்றை பிசிசிஐ ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்திருந்தது. அந்த வீடியோ காட்சியில் சால்ட் அண்ட் பெப்பர் தோற்றத்தில் இருந்தார். அந்தப் புகைப்படம் சமூக ஊடகங்களில் வைரலாகியது. பழைய மாதிரியான ஹேர் ஸ்டைல் இல்லை. மேலும் அவர் சற்று சோர்வாக தெரிந்தார். சற்றே வெளிர் நிறத்தில் தோனி இருந்தார்.
ஆனால் பார்த்ததும் கண்ணைக் கவரும் விதமாக அவரது தாடி நரைத்து இருந்தது. அதைதான் அவரது ரசிகர்கள் சால்ட் அண்ட் பெப்பர் எனக் குறிப்பிட்டு கொண்டாடினர். சிலர் அதை சாம்பல் நிறமாகவும், நரைத்துப் போய் உள்ளதாகவும் கூறியிருந்தனர். நெட்டிசன்கள் சிலர் இந்தியாவின் முன்னாள் கேப்டனின் வயதைக் கேள்விக்குள்ளாக்கும் விதமாக எழுதி இருந்தனர்.
இந்நிலையில் இந்தக் கருத்திற்கு பதிலளித்த தோனியின் தாய் தேவகி தேவி, தனது மகனுக்கு சமூக ஊடகங்களில் சிலர் கூறிய அளவுக்கு இன்னும் வயதாகவில்லை என்று மறுத்துள்ளார். அவர், “ஆம், நான் அவரது புதிய தோற்றத்தைக் கண்டேன். ஆனால் தோனி அவ்வளவு வயதானவர் அல்ல. எந்தவொரு தாய்க்கும் எந்தக் குழந்தையும் வயதாவதாக தெரிவதில்லை” என்று கூறியுள்ளார்.
இந்த ஆண்டு ஜூலை 7 ஆம் தேதி 39 தோனிக்கு வயதாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.