சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி 16 ஆயிரம் ரன்களை எடுத்துள்ளார்.
டெஸ்ட் போட்டியில் தோனி ஓய்வு பெற்ற போதும் ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் விளையாடி வருகிறார். இன்று நடைபெற்ற இலங்கைக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் தோனி 65 ரன்கள் எடுத்தார். இந்தப் போட்டியில் இந்திய அணி 112 ரன்கள் மட்டுமே எடுத்தது. மற்ற அனைத்து வீரர்களும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்த போதும் தோனி தனி ஆளாக நின்று அரைசதம் அடித்தார். ஒருநாள் போட்டிகளில் இது அவரது 67-வது அரைசதம் ஆகும்.
தோனி ஓய்வு பெறுவது குறித்து தொடர்ச்சியாக விமர்சனங்கள் எழுந்து வந்த நிலையில், அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் இன்றைய போட்டி அமைந்தது. இந்தப் போட்டியில் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் 16 ஆயிரம் ரன்கள் கடந்து தோனி புதிய மைல்கல்லை எட்டியுள்ளார். இதுவரை மொத்தம் 482 போட்டிகளில் விளையாடியுள்ள தோனி, 16 சதங்களையும் 100 அரைசதங்களையும் எடுத்துள்ளார்.
இந்திய அணியை பொருத்தவரை ஒரு போட்டியில் அதிக சதவீதம் ரன்கள் எடுத்தவர் என்ற மைல்கல்லையும் தோனி எட்டியுள்ளார். மொத்தம் எடுக்கப்பட்ட 112 ரன்னில் தோனி 65 ரன்கள் எடுத்தார். இது 58.3 சதவீதம் ஆகும். மற்ற வீரர்கள், எக்ஸ்ட்ரா அனைத்தும் சேர்த்து 47 ரன்கள் மட்டுமே எடுக்கப்பட்டது. சேவாக் இதற்கு முன்பு 56 சதவீதம் (112/200) ரன்கள் எடுத்தது மைல்கல்லாக இருந்தது. ஒரு அணியின் குறைந்தபட்ச ஸ்கோரில் தனி நபரின் அதிகபட்ச ரன் தோனி எடுத்த 65 ரன்கள்தான்.