இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 2 ஆவது ஒரு நாள் போட்டி நேற்று லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்றது. டாஸ் ஜெயித்த இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய இங்கிலாந்து அணி 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 322 ரன்கள் எடுத்தது. பின்னர் 323 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி, 236 ரன்களுக்கே ஆல் அவுட் ஆனது.
எனவே இங்கிலாந்து அணி 86 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்திய அணி சார்பில் அதிகப்பட்சமாக சுரேஷ் ரெய்னா 46 ரன்களும், விராட் கோலி 45 ரன்களும் எடுத்திருந்தனர். இந்தப் போட்டியில் 10 ஆயிரம் ரன்களை கடந்த தோனி 37 ரன்களுக்கு அவுட்டானார். இந்த 37 ரன்களை எடுக்க 59 பந்துகளை சந்தித்தார் தோனி.
தோனி பொதுவாகவே பெஸ்ட் பினிஷர் என பெயரெடுத்தவர். ஆனால் நேற்றையப் போட்டியில் அவர் மிகவும் பொறுமையாக ஆடினார். இது தோனியின் வழக்கமான பேட்டிங் இல்லை. லார்ட்ஸில் தோனியின் பொறுமையான ஆட்டத்தை பார்த்த இங்கிலாந்து ரசிகர்கள் "ஊஊஊஊஊஊஊ" என சத்தமிட்டு தங்களது அதிருப்தியை வெளிப்படுத்தினர்.
மேலும், போட்டியை ஒளிபரப்பிய தொலைக்காட்சி, ஒரு சிறுவனும் சில ரசிகர்களும் மைதானத்தில் தூங்குவது போன்ற காட்சியை அடிக்கடி ஒளிபரப்பினர். அப்போது தோனி மெதுவாக ஆடியதால் ரசிகர்கள் தூங்குகிறார்கள் என்ற ரீதியில் காட்சிகள் ஒளிப்பரப்பப்பட்டன. மேலும் தோனி ரன் எடுக்காத நேரங்களில் எல்லாம் ரசிகர்கள் கிண்டல் செய்யத் தொடங்கினர். இதனையடுத்து 47 ஆவது ஒவரில் பிளங்கட் வீசிய பந்தில் அவுட்டாகி வெளியேறினார் தோனி.
பின்னர் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் இந்திய அணி கேப்டன் விராத் கோலியிடம் தோனியை கிண்டல் செய்தது பற்றி கேட்கப்பட்டது, அதற்கு "தோனி கடைசி வரை நின்று ஆடி வெற்றிப்பெற வேண்டும் என்றுதான் களமிறங்கினார். ஆனால் விக்கெட்டுகள் ஒரு பக்கம் வீழ தொடங்கியதால் அவரால் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்த முடியவில்லை. நாங்கள் தோனி மீது முழு நம்பிக்கை வைத்துள்ளோம்.
ஏதோ ஒரு போட்டியில் இப்படி நடந்தால், அதனை வைத்து தோனி குறித்த ஒரு முடிவுக்கு வருவது தவறு. தோனி மீதான விமர்சனமோ, கிண்டலோ அணியை பாதிக்காது. தோனி மீதான இத்தகைய விமர்சனங்களும் புதிதல்ல" என கூறியுள்ளார். தோனியின் இந்த "ஸ்லோ" பேட்டிங் காரணமாக சமூக வலைத்தளங்களில் மீம்ஸ்களும் பரவி வருகிறது.